கிளிநொச்சியில் பிராந்திய மதுசார புனர்வாழ்வு மையம் திறந்து வைப்பு

தருமபுரத்தில் அமைந்துள்ள பிராந்திய மதுசார புனர்வாழ்வு மையத்தின் பெயர் பலகை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட உளநல பொறுப்பு வைத்தியரும், பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான மா.ஜெயராசா தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன் போது, கொடையாளர் நினைவுக்கல் திரைநீக்க நிகழ்வும் நடத்தப்பட்டுள்ளது. நிகழ்வில் இந்த நிலையத்தினை நிர்மாணிப்பதிலும், இயக்குவதிலும் பிரதான பங்கு வகித்து வரும் வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் முதன்மை விருந்தினராகவும் உளநலத்துறை விசேட வைத்திய நிபுணர் மகேசன் கணேசன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த 2014.10.31 முதல் இயங்கி வரும் இந்த நிலையத்தில் இதுவரை மது நோயால் பாதிக்கப்பட்டு மதுவிற்கு அடிமையாகியிருந்த 290 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று முற்றாகக் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்,காலத்தின் தேவையான இந்த நிலையத்தினை அமைப்பதற்கான நிதியுதவி கனடா தமிழ் மருத்துவர் சங்கம் (CTMA), அன்பு நெறி, சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (IMHO), டொரன்றோ பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகளால் கிளிநொச்சி உளநலச் சங்கத்தினூடாக வழங்கப்பட்டுள்ளது.

You might also like