சுவிஸ் குமார் தப்பிச்செல்ல உதவிய பிரதி பொலிஸ்மா அதிபர்? நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதேவேளை, புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான சுவிஸ் குமாரை கொழும்புக்கு தப்பிச்செல்ல உதவியதாக இவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்ற போது யாழ். உள்ளிட்ட பகுதிகளுக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க பொறுப்பாகவிருந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 209வது பிரிவின் கீழ், பிரதான சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்தமை, சந்தேகநபர் மறைந்திருப்பதற்கு உதவினார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like