கிளிநொச்சி பல்லவராயன்கட்டு அ.த.க பாடசாலை அடுத்த ஆண்டு மீள ஆரம்பம்

கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள யுத்த காலத்தில் செயலிழந்த பல்லவராயன்கட்டு அ.த.க பாடசாலையை அடுத்த ஆண்டு மீள இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக வலயக் கல்விப் பணிப்பாளர் திருஞானம் ஜோன் குயின்ரஸ் உறுதியளித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் காரணமாக கல்வியில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

பாடசாலைகளின் பௌதீக வளங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் உள்ள 112 பாடசாலைகள் யுத்தத்தினால் பாதிப்படைந்திருந்தன.

மீள்குடியமர்வின் பின்னரான அபிவிருத்திகளின் மூலம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் கிளிநொச்சி மாவட்டத்தின் ஆறு பாடசாலைகள் மீளவும் இயங்காத நிலையில் காணப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த வலயக் கல்விப் பணிப்பாளர் யுத்தத்தினால் மூடப்பட்ட பாடசாலைகளை சென்று பார்வையிட்டுள்ளதாகவும் இதில் பல்லவராயன்கட்டு அ.த.க பாடசாலையினை அடுத்து ஆண்டு மீள ஆரம்பிக்க வேண்டிய தேவையுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் குறித்த பாடசாலையில் எந்தவித கட்டிட வசதிகளும் இல்லை எனவும் தரம் 1 முதல் 5 வரையான வகுப்புக்களை ஆரம்பிக்க வேண்டிய தேவையுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like