சந்நிதி ஆலய திருவிழாவில் 10 இலட்சம் பெறுமதியான நகைகள் திருட்டு!

தொண்டமானாறு சந்நிதியான் ஆலயத்தின் இன்று இடம்பெற்ற தேர் உற்சவத்தில் மாத்திரம் சுமார் 10 இலட்சம் பெறுமதியான 22 பவுன் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொண்டமானாறு சந்நிதியான் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவத்தினை முன்னிட்டு யாழ் மாவட்டம் தவிர்ந்த வெளி மாவட்டங்களில் இருந்தும் அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் ஆலயத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருப்பதை தடுப்பதற்கு ஆலயத்தில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு முறைப்பாட்டு பணிமனையும் அமைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் மக்களுடன் மக்களாக கலந்து வந்த திருடர்கள் மக்கள் நெரிசலை தமக்கு சாதகமாக பயன்படுத்தி பல பெண்களுடைய தங்கச் சங்கிலிகளை அறுத்துள்ளனர்.

சங்கிலிகளை பறிகொடுத்த பொது மக்கள் ஆலய வளாகத்தில் அமைந்திருந்த பொலிஸ் முறைப்பாட்டு பணிமனையில் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்நிதி ஆலய தேர்த் திருவிழாவில் திருடுவதற்காக வந்தவர்கள் என்னும் சந்தேகத்தின் பேரில் வாகனச் சாரதி உட்பட ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் வெளிமாவட்டத்தில் இருந்து ஹையஸ் வாகனம் மூலம் வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

காங்கேசன் துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் குறித்த ஐவரும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் தங்களை அடையாளப்படுத்துவதற்குரிய ஆவணங்கள் மற்றும் வாகனத்துக்குரிய ஆவணங்கள் எதுவுமற்ற நிலையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் சந்தேகத்துக்கு இடமான இரு வாகனங்களும் தேடப்படுவருவதாகவும் இவர்கள் வந்த வாகனத்தை பொலிஸார் தடுத்து வைத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like