உலக தற்கொலை தடுப்பு தினம் – ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை

சில நிமிடம் சிந்தியுங்கள், வாழ்க்கையை மாற்றுங்கள் என்ற தொனிப்பொருளில் உலக தற்கொலை தடுப்பு தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

தற்கொலை அறவே கூடாது என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, வருடா வருடம் செப்ரெம்பர் 10ம் திகதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

உலகளவில் 2015 கணக்கின் படி, ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர்.

40 நிமிடத்துக்கு ஒருவர் தற்கொலை செய்கிறார் என உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.

கல்வியில் சாதிக்க முடியாத விரக்தியில் மாணவர்கள், வரதட்சனை, பாலியல் உள்ளிட்ட கொடுமைகளால் பெண்களும், வறுமை, கடன் உள்ளிட்ட பிரச்னைகளால் ஆண்களும்; வேலையில் தொந்தரவு, காதல் தோல்வி போன்ற காரணங்களுக்காக இளைஞர்களும் தற்கொலைக்கு முயல்கின்றனர்.

பிரச்னைகளை சந்திக்கும் பக்குவத்தை பெற்று விட்டால், தற்கொலை எண்ணம் தலை தூக்காது.

வாழ்க்கையில் துன்பங்களை கண்டு துவண்டு விடாமல், எதிர்த்து நின்று போராட வேண்டும். அதற்குப் பதிலாக தற்கொலை என்ற பெயரில் உயிரை மாய்த்துக் கொள்வது கோழைத்தனமான செயல்.

பிரச்னைகள் இல்லாதவர்களே உலகில் இல்லை. ஒவ்வொரு பிரச்னைக்கும் அதற்கான தீர்வுகளும் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். பிரச்னைக்கு தீர்வு தற்கொலை தான் என எண்ணினால், உலகில் யாரும் இருக்க மாட்டார்கள்.

பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு தற்கொலை என தவறாக சிந்திக்கின்றனர். இதனால் அவரை சார்ந்திருப்பவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என அறிவதில்லை.

You might also like