வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு கலந்து கொள்ளமுடியாது : நீர்ப்பாசன திணைக்களம்

அரசியல் தலைமைகளால் நடத்தப்படும் கூட்டங்களுக்கு தம்மால் கலந்துகொள்ள முடியாது பொறியியலாளர் சங்கம் தீர்மானித்துள்ளதால் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தாம் கலந்துகொள்ள முடியாதுள்ளதாக மத்திய நீர்ப்பாசன திணைக்களம் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துள்ளது.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வரும் நிலையில் நீர்ப்பாசனத்திணைக்களம் இவ் அறிவித்தலை வழங்கியுள்ளது.

இவ் அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசியல் தலைமைகளால் நடத்தப்படும் கூட்டங்களுக்கு கலந்துகொள்வதில்லை என இலங்கை பொறியியலாளர் சங்கம் தீர்மானம் எடுத்துள்ளதால் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியாதுள்ளதுடன் முன்னேற்ற அறிக்கையையும் சமர்ப்பிக்க முடியாதுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இணைத்தலைவர்கள் இது அரசியல் கூட்டம் இல்லை எனவும் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக இடம்பெறும் கூட்டம் என்பதால் அவர்கள் கலந்துகொள்ளவேண்டும் என தெரிவித்தனர்.

இதன்போது வட மாகாண கல்வி அமைச்சர் அவர்கள் அரச உத்தியோகத்தர்களாக உள்ளமையினால் அரசின் செயற்றிட்டத்திற்கு கலந்துகொள்ளவேண்டும். அவ்வாறு இல்லா விட்டால் அவர்கள் அரச தொழிலை உதாசீனம் செய்வதாக கருதப்படும் என தெரிவித்தனர்.

இதன்போது குறித்த கூட்டத்தில் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என கடிதம் அனுப்புமாறு பணிக்கப்பட்டது.

You might also like