கிளிநொச்சியில் வைத்தியத்துறையில் வைத்திய நிபுணர்கள் உட்பட 113 இற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தின் வைத்தியத்துறையில் வைத்திய நிபுணர்கள் உட்பட 113 இற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

 யுத்த பாதிப்புக்களில் இருந்து மீண்டு வரும் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் தமக்கான மருத்துவ தேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன.

மாவட்டத்திலுள்ள பல வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கான பற்றாக்குறை காணப்படுகின்றன. இதனைவிட ஏனைய ஆளணி மற்றும் பௌதிக தேவைகளும் அதிகளவில் காணப்படுகின்றன.

தற்போதைய ஆளணி விபரங்கள் தொடர்பில் மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில்,

கிளிநொச்சி மாவட்டத்தின் வைத்திய துறைக்கு தற்போதுள்ள தேவைகளின்படி 113 இற்கும் மேற்பட்ட ஆளணி வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

அதாவது 19 வைத்திய நிபுணர்கள் தேவையான நிலையில் 17 வைத்திய நிபுணர்களும், 108 வைத்தியவர்கள் தேவையான நிலையில் 85 வைத்தியவர்களும், 13 பல் வைத்தியர்கள் தேவையான நிலையில் 10 வைத்தியர்களும் மாத்திரமே கடமையாற்றி வருகின்றனர்.

இதேவேளை 122 தாதிய உத்தியோகத்தர்கள் தேவையான நிலையில் 91 தாதிய உத்தியோகத்தர்களும், 99 குடும்பநல உத்தியோகத்தர்கள் தேவையான நிலையில் 61 குடும்ப நல உத்தியோகத்தர்களும் கடமையாற்றுகின்றனர்.

இதனைவிட பொதுச்சுகாதார பரிசோதர்கள், மருத்துவ கலவையாளர், தடுப்பூசி வழங்குனர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட 23 பதவி நிலைகளில் கடமையாற்ற வேண்டிய ஆயிரத்து 58 ஆளணி வளத்தேவைகள் காணப்படுகின்ற நிலையில், 945 பேர் மாத்திரமே கடமையாற்றி வருவதுடன் 113 பேருக்கான பணிநிலை வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

You might also like