கிளிநொச்சியில் மூதாட்டியை கத்தியால் வெட்டிய சம்பவம்! சிப்பாய்க்கு விளக்கமறியல்

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவரை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புபட்டு தலைமறைவாகியிருந்ததாக தெரிவிக்கப்படும் இராணுவச் சிப்பாயை விளக்கமறியலில் வைக்குமாறும் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளநொச்சி சாந்தபுரம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவரை பற்றைக்குள் இழுத்துச்சென்று கழுத்தில் கத்தியால் வெட்டி காயப்படுத்தியதாக குறித்த இராணுவச் சிப்பாய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மூதாட்டி ஆபத்தான நிலையில் அயலர்களால் காப்பற்றப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரை தனக்கு நன்கு தெரியும் எனவும் தமது பகுதியில் உள்ள இராணுவமுகாமில் கடமையாற்றிய இராணுவச்சிப்பாயே எனவும் மூதாட்டி குறிப்பிட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் கிளிநொச்சிப் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 26ம் திகதி பாதிக்கப்பட்ட மூதாட்டியை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்நிறுத்தி திறந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக மன்றுக்கு அறிவிக்குமாறும் தெரிவித்ததுடன், சம்பவ தினத்தன்று பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளரை அந்த இராணுவமுகாமில் கடமையிருந்த இராணுவத்தினரை காட்டுமாறும் பொலிசாருக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றையதினம் (11.09.2017) குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டதென சந்தேகிக்கப்படும் இராணுவச்சிப்பாயை கைது செய்த கிளிநொச்சிப் பொலிசார் நேற்று பிற்பகல் 5.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ,ஆனந்தராஜா முன்னிலையில் நீதவான் அறையில் ஆஜர்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து, மேற்படி சந்தேகநபரான படைச்சிப்பாயை விளக்கமறியலில் வைக்குமாறும் அத்துடன், அடையாள அணிவகுப்புக்கும் உட்படுத்துமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

You might also like