இலங்கையில் தடைசெய்யப்பட்டவர்களே புலிகள்! வடக்கு மக்கள் புலிகள் இல்லை: இராஜாங்க அமைச்சர்

வடக்கு மக்களுக்கு நாம் ஒருபோதும் புலிகள் என்ற முத்திரை குத்தவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அண்மையில் வடக்கு முதல்வர், மாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் “என்னையும், வடக்கு மக்களையும் தென்னிலங்கையில் புலிகளாகவே பார்க்கின்றனர்” என ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இக்கூற்றுக்கு பதில் தெரிவிக்கும் விதமாகவே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இதை குறிப்பிட்டார். மேலும்,

முன்னைய ஆட்சியாளர்கள் விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் செய்தார்கள். ஆனால் தற்போது அவ்வாறு இல்லை. தமிழ் தலைமைகள் எம்முடன் இணைந்து போராடுகின்றார்கள் என குறிப்பிட்டார்.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை நாம் நிராகரிக்க வில்லை.

ஆனால் மக்களை நினைவு கூருவதற்கு மாத்திரமே நினைவுத்தூபி அமைக்கப்படும். புலிகளை நினைவு கூர அல்ல. அவர்கள் இந்த நாட்டில் தடை செய்யப்பட்டவர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளை நினைவு கூருவதற்கு நினைவுத்தூபி அமைக்கப்படுமானால் அது இராணுவத்தினரை அவமதிக்கும் செயல் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் அமைதியாக வாழ்கின்றனர் என்றால் அதில் இராணுவத்தினரின் பங்களிப்பே அதிகம் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

You might also like