படப்பிடிப்பு இருப்பதாக கூறி 18 ஆடுகள் திருட்டு! கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் வாழ்வாதாரத்தேவைக்காக வழக்கப்பட்ட 18 ஆடுகளை, அதன் உரிமையாளர்களை ஏமாற்றி கடத்திச்செல்லப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று காலை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் மீள்குடியேறியுள்ள மாற்று ஆற்றல் கொண்ட ஒருவரின் வீட்டிற்கு நேற்று முன்தினம் மாலை நபர் ஒருவர் சென்றுள்ளார்.

குறித்த நபர் இராணுவமுகாமில் கண்காட்சி மற்றும் படப்பிடிப்பு ஒன்று இருப்பதாகவும் அதற்கு ஆடுகள் தேவைப்படுவதாக கூறியுள்ளதுடன், இருபதாயிரம் ரூபா பணம் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் ஆட்டு உரிமையாளரின் மகனை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தர்மபுரம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களுக்கு சென்ற நிலையில், பரந்தன் பகுதயில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிக்கும் சென்றுள்ளனர்.

அங்கு மதுபானம் அருந்தியதாகவும், பின்னர் வீட்டிற்குச்சென்று இறக்கி விட்டு, வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றதாகவும் பாதிக்கப்பட்ட ஆட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை 6.30 மணியளவில் வானத்தில் வந்து ஆடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து 18 ஆடுகளை ஏற்றிக்கொண்டு, ஆட்டின் உரிமையாளரையும் ஏற்றி சென்றுள்ளார்.

பின்னர் ஏ-9 வீதியூடாக கிளிநொச்சி நகரைச்சென்று அங்கு கடையொன்றில் உங்களுடைய தேசிய அடையாள அட்டையின் பிரதியொன்றை எடுத்து வருமாறு இறக்கி விட்டு ஆடுகளுடன் குறித்த வாகனம் தப்பிச்சென்றுள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனடிப்படையில் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட வாகன மற்றும் வாகனத்தின் இலக்கத்தகடு, மற்றும் அதன் உரிமையளார் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதே பணியில் வவுனியாவில் நடந்த திருட்டுச்சம்பவம் தொடர்பான செய்தி :-  வவுனியாவில் சூட்சுமமான முறையில் 15 ஆடுகள் கொள்ளை

You might also like