போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் முல்லைத்தீவு மக்கள்

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பாலைப்பாணி பகுதியில் போக்குவரத்து வசதிகள் இன்மையால் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றதாக இந்த பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து பிரச்சினையால் குறித்த பகுதியில் உள்ள பாடசாலை ஓர் ஆரம்பப் பாடசாலையாகக் காணப்படுவதுடன், போதிய ஆசிரியர் வளம் இன்றியும், நீண்டகாலமாக இயங்கி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு இந்த பகுதி மக்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்ற போதும் இதுவரை எந்த தேவைகளும் செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் இங்குள்ள ஆரம்பக் கல்வி மாணவர்கள் 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வன்னி விளாங்குளம் பாடசாலை, மாங்குளம் மகா வித்தியாலயம், மல்லாவி மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு செல்லவேண்டிய நிலையில் காணப்படுகின்றனர்.

இந்த நிலையில் பாலைப்பாணி கிராமத்திலிருந்து மாங்குளம், வெள்ளாங்குளம் மூன்று முறிப்பு சந்தி வரைக்குமான சுமார் எட்டுக் கிலோ மீட்டர் தூரம் எந்தப் போக்குவரத்து வசதிகள் இன்றி காணப்படுவதுடன், வீதியின் இரு பக்கங்களும் பாரிய காடுகளை கொண்டு காணப்படுவதனால் போக்குவரத்தில் அச்சநிலையை எதிர்கொள்வதாகவும் இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இங்குள்ள வசதிக் குறைபாடுகள் காரணமாக அன்றாடம் பெரும் சிரமங்களை இந்த பகுதி மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

மேலும், அதிகளவான சிறுவர்கள் கல்வியை இடைநிறுத்தி கூலி வேலைகளை செய்கின்ற நிலை காணப்படுவதாக இந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like