கிளிநொச்சியில் சட்டவிரோத செயல்களுக்கு உட்படுத்தப்படும் மாணவர்கள்

கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத செயல்களுக்கு மாணவர்கள் உட்படுத்தப்பட்டு வருவதாக கிளிநொச்சி வலயக் கல்வி பணிப்பாளர் திருஞானம் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள் ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்தப்படுதல், சட்டவிரோத செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்படல் போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும், பின் தங்கிய கிராமங்களில் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இந்த நிலையில் கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்று வரும் சில மாணவர்கள் சட்டவிரோத மணல் அகழ்வு போன்ற சட்ட விரோதமான செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இம்முறை நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர் ஒருவர் முதல் நாள் பரீட்சையை எழுதிவிட்டு மணல் அகழ்வில் ஈடுபட்ட நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தண்டப்பணம் செலுத்தியுள்ளார்.

அதன் பின்னர் மறுநாள் பரீட்சைக்கு தோற்ற வேண்டிய நிலையில் உரிய நேரத்திற்கு பரீட்சை மண்டபத்திற்குள் செல்லாது ஒரு மணி நேரம் தாமதமாகியே பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

எனவே, மாணவர்களின் எதிர்காலம் தொடர்பில் கருத்தில் கொண்டு இவ்வாறான சம்பவங்களில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

You might also like