வவுனியா துவரங்குளத்திற்கு பேரூந்து சேவை, முன்பள்ளி அமைத்துத்தருமாறு கோரிக்கை

வவுனியா நொச்சிமோட்டை கிராமசேவையாளர் பிரிவிலுள்ள துவரங்குளத்திற்கு பேருந்துச் சேவை , முன்பள்ளி என்பன அமைத்துத்தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யுத்தம் முடிவுற்ற பிற்பாடு இப்பகுதியில்  கடந்த 2010ஆம் ஆண்டு மீள் குடியேற்றப்பட்ட மக்கள் தமக்கு சீரான போக்குவரத்து இன்மை தமது பிள்ளைகளுக்கான முன்பள்ளி தேவை என்பவற்றை வலியுறுத்தி வருகின்றனர்.

நொச்சிமோட்டை பகுதியிலிருந்து 3கிலோ மீற்றர் தூரத்திலுள்ள துவரங்குளம் பகுதியில் 25தொடக்கம் 30வரையான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தமது ஜீவனோபயமாக கூலித் தொழிலினையே மேற்கொண்டு வருகின்றனர். வைத்தியசாலை, பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் போன்ற இதர தேவைகளினிமித்தம் வவுனியா நகருக்கே செல்லவேண்டிய தேவையும் ஏற்படுகின்றது.

பிரதான ஏ9 வீதியிலிருந்து 3கிலோ மீற்றர் நடந்தும் ஏனைய வாகனங்களிலும் தமது பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர். தமது இந்நிலை தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் தமது கோரிக்கைக்கு தீர்வு பெற்றுக்கொள்ள முடியவில்லை.

தமது பிள்ளைகளின் எதிர்கால கல்வி செயற்பாடுகளுக்கு தமது பகுதியில் ஒரு முன்பள்ளியினை அமைத்துத்தருமாறும் கோரியுள்ள துவரங்குளம் பொதுமக்கள் தமது கிராமத்திலிருந்து சின்னக்குளம் ஊடாக மாமடு பகுதிக்கான பேருந்து செவையினை மேற்கொண்டு தருமாறும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like