வவுனியாவில் போக்குவரத்து மருத்துவ சான்றிதழ் பெற பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு செல்பவர் ஏழு மணி நேரமாக காக்க வைக்கப்படுவதாக மருத்துவ சான்றிதழ் பெற செல்லும் சேவை நாடிகள் விசனம் வெளியிட்டனர்.

புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுபவர்கள், சாரதி அனுமதிப்பத்திரத்தை புதிப்பிக்க செல்பவர்கள் மற்றும் சாரதிகளுக்கான பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு வவுனியா மாவட்ட செயலகத்தின் வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்திற்கு செல்பவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு சுமார் ஏழு மணிநேரமாக காக்க வைக்கப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டினர்.

மருத்துவ சான்றிதழ் பெறுவதற்காக காலையில் 8.30 மணிக்கு வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு செல்பவர்கள் மாலை 2.00 மணிவரையில் காத்திருந்து மருத்துவ சான்றிதழை பெறவேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு வந்திருந்த ஒருவர் கருத்து தெரிவிக்கையில்

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்தவ பரிசோதனை மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. உயரம் நிறை போன்றவற்றுடன் புகைப்படம் மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்துவதுடன் அடுத்ததாக இரத்தப்பரிசோதனை செய்யப்பட்டு வைத்திய அதிகாரியின் மூலம் கண்பரிசோதனை இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றது. ஆனால் மருத்துவ சான்றிதழ் வழங்கும் வைத்தியர் காலை 8.30 மணிதொடக்கம் 10.00 மணிவரையும் சேவையாற்றிவிட்டு புறப்பட்டு சென்று விடுவதாகவும் பின்பு மதியம் 1.00 மணிக்கு மீண்டும் வரும் மருத்துவ அதிகாரி பரிசோதனைகளை முடித்து சான்றிதழ் வழங்க மாலையாகி விடுவதாகவும் குற்றஞ்சாட்டினர்.

அத்துடன் மருத்துவ சான்றிதழுக்காக ஒரு சேவை நாடியிடமிருந்து 750 ரூபா கட்டணமாக அறவிடப்படுவதுடன் மாற்றிய பணம் கொடுக்காவிட்டால் 50 ரூபாபணம் மீள வழங்கப்படுவதில்லை என்பதுடன் பணம் பெற்றுக்கொண்டதற்கான ரசீத்தில் 50 ரூபா என எழுதி வழங்கப்படுவதுடன் அதை மீள பெற்றுக்கொள்வதற்கு செல்லுமிடத்து பணம் செலுத்தும் காரியாலயம் மூடப்பட்டிருப்பதாகவும் சேவை நாடிகள் கவலை வெளியிட்டனர்.

வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு சேவையை பெற வரும் அரச உத்தியோகத்தர்கள் தனியார் நிறுவனங்களில் தொழில் புரிபவர்கள், குடும்பப்பெண்கள் வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் இந் நடவடிக்கை காரணமாக பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் விசனம் வெளியிட்டனர்.

You might also like