காணாமல் போன உறவுகளை மீட்டுத்தரக்கோரி வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் போன உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நான்கு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு கையொப்பமிட்டு அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை இன்று (20) அனுப்பி வைத்துள்ளனர்.

வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக எதிர்வரும் திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக குறித்த சங்கத்தின் வவுனியா மாவட்டத்தலைவி ஜெயவனிதா காசிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமற் போன உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினராகிய நாங்கள், இலங்கை அரச படைகள் மற்றும் அரச துணை ஆயுதகுழுக்களால் எமது உறவுகள் கடத்திச் செல்லப்பட்டமையை கண்கண்ட சாட்சிகளாக உள்ளோம்.

அரசினால் நியமிக்கப்பட்ட பலதரப்பட்ட ஆணைகுழுக்கள், உள்ளூர் மற்றும் சர்வதே மனித உரிமை அமைப்புகள், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், தமிழ் மக்களின் அரசியல் அதிகாரம் பெற்றுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, சர்வதேச சமூகம் என்று சகல தரப்புகளிடமும் முறையிட்டும், வருடங்கள் பல கடந்த நிலையிலும் எமது உறவினர்கள் விடுவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், பல்வேறான கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தியும், எமது உறவினர்கள் தொடர்பில் உரிய தீர்வு எமக்கு வழங்கப்படவில்லை.

ஆகவே சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றினை எதிர்வரும் திங்களன்று(23) முன்னெடுக்கவுள்ளோம்.

அதேவேளை எமக்கு பின்வரும் கேள்விகளுக்கான விடை கிடைக்க வேண்டும்

01. எமது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா?

02. உயிருடன் இருந்தால், அவர்கள் எந்த இரகசிய சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்?

03. உயிருடன் இல்லாவிட்டால், அவர்களுக்கு என்ன நடந்தது? யாரால்? எப்படி? கொலைசெய்யப்பட்டு, எங்கே புதைக்கப்பட்டுள்ளார்கள்? என்பவற்றை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.

04. கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள எமது உறவுகள் உயிரோடு இருப்பின், அவர்கள் தத்தமது குடும்பத்தினரோடு இணைந்து வாழ்வதற்கு உடனடியாக வழி விடுவதோடு, சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.

குறித்த எமது கோரிக்கைகள் அனைத்தும் நிபந்தனைகள் ஏதுமின்றி தங்களால் நிறைவேற்றப்படும் வரை சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

நாங்கள் உயிரிழந்தால் அதற்குரிய முழுப்பொறுப்பையும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், ஆகியோரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் தெரியப்படுத்துகின்றோம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

You might also like