பொலிஸாருக்கு எதிராக சந்தேகநபர் கிளிநொச்சி நீதிமன்றில் வாக்குமூலம்!

கிளிநொச்சி – பளைப்பகுதியில் அனுதிப்பத்திரமின்றி அரச சீல் சாராயத்தினை விற்பனை செய்தமை மற்றும் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட ஒருவர் பொலிஸாருக்கு எதிராக நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றினால் தவணையிடப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சாட்சிகள் சார்பில் அப்போதைய பளைப்பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பவம் தொடர்பான தனது வாக்குமூலத்தை வழங்கியிருந்தார்.

அந்த வகையில், “சந்தேகநபர், 175 மில்லிலீற்றர் அரச சீல் சாராயத்தினை பணத்திற்கு விற்பனை செய்ததாகவும், 175 மில்லிலீற்றர் மற்றும் 750 மில்லிலீற்றர் அளவுகளைக்கொண்ட அரச சீல் சாராயத்தினை மண்ணுள் புதைத்து வைத்திருந்ததாகவும்” மன்றில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், தமது நடவடிக்கையின் போது குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டு உடுத்துறைப்பகுதியில் வைத்து தடயப்பொருட்களையும், சந்தேகநபர்களையும் கைது செய்து சென்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, சான்றுப்பொருட்களும் சாட்சியான பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிக்கு காட்டப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

சந்தேகநபர் சட்டத்தரணிகள் எவரையும் நியமிக்காது தானே நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரியிடம் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டதுடன், தனது வாக்குமூலத்தையும் வழங்கிருந்தார்.

இவர் தனது வாக்குமூலத்தில் இல – 834, வைத்தியசாலை வீதி, யாழப்பாணம் என்னும் முகவரியில் வசித்து வருவதாகவும், தனக்கு பளைப்பொலிஸ்பிரிவில் காணிகளோ அல்லது எதுவித பதிவுகளுமோ இல்லை என்றும் கூறியிருந்தார்.

சம்பவ தினத்தன்று தான் யாழ்ப்பாணத்தில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவையுடைய ஒன்பது போத்தல்களைக் கொண்ட விலையுயர்ந்த மதுபானப்போத்தல்களைக் தனது நண்பர்களுடன் மது அருந்துவதற்காக கொண்டு வந்ததாகவும் மன்றில் தெரிவித்தார்.

பளை – இயக்கச்சி சந்திப்பகுதியில் தனது நன்பரின் வருகைக்காக காத்திருந்த சமயம், அப்பகுதியில் வைத்து இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் நிலையம் அழைத்துச்சென்று எந்த முறைப்பாடுகளும் பதியப்படாமல் தடுத்து வைக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

அதன் பின்னர் மறுநாள் தன்னை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாகவும், பொலிஸார் குறிப்பிட்ட சகல தகவல்களும் உண்மைக்கு புறம்பானவை எனவும், இங்கு சான்றுப்பொருளாக காட்டப்பட்ட சாராயம் எதுவும் தன்னிடம் இருந்து எடுத்தவையல்ல என்றும் மன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அவை அனைத்தையும் எடுத்து விட்டு, இங்கு தரம் குறைந்த சாராயத்தையே காண்பித்துள்ளனர் என்றும் நீதிமனிறில் வாக்குமூலம் வழங்கியனார்.

இதனையடுத்து, இந்த வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக நவம்பர் மாதம் 8ம் திகதி தவணையிட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You might also like