வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் கௌரவிப்பு நிகழ்வு!

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசிய கல்வியல் கல்லூரியில் வணிகதினம் மற்றும் கல்லூரியின் பீடாதிபதி கௌரவிப்பு நிகழ்வுகள் இன்று 23.09.2017 (சனிக்கிழமை) கல்லூரியின் வணிக மன்றத் தலைவர் ஏ.ரி.இம்ரான் கான் தலைமையில் நடைபெற்றது.

வணிக தினம் (2017) ஐ முன்னிட்டு வவுனியா தேசிய கல்வியல் கல்லூரி மாணவர்களால் அறிவுக்களஞ்சியம் போட்டி, தொல்லை தரும் தொலைபேசி, நீரைச் சேமிப்போம் போன்ற கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன், வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியின் வணிக மன்றத்தின் வெளியீடான ‘வணிகத் தேடல்’ என்ற நூலை விரிவுரையாளர் திருமதி.நி.அரவிந்தன் வெளியீடு செய்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசிய கல்வியல் கல்லூரியில் 25 வருடங்களாக ஆசிரிய கல்வியாளராக பணியாற்றிய பீடாதிபதி கு.சிதம்பரநாதனை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்த ஓய்வுபெற்ற அதிபர் சிவஞானம், தமிழ் மணி அகளங்கன், இறைபணிச் செம்மல் வை.செ.தேவராஜா, உப பீடாதிபதி க.சுவர்ணராஜா மற்றும் ஆசிரிய மாணவர்கள் ஆகியோர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கல்லூரியின் பீடாதிபதியை கௌரவித்திருந்தனர்.

நிகழ்வில் உப பீடாதிபதிகளான க.பரமானந்தம், டி.ஜெயக்காண்டீபன், விரிவுரையாளர் க.சிவகுமார்,தேசிய கல்வியல் கல்லூரியின் வணிக மன்றத்தின் ஆலோசகர் திருமதி.நிஅரவிந்தன் மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like