வடக்கு சுகாதார அமைச்சர் குணசீலனிடம் விளக்கம் கேட்கிறது ரெலோ

அவரை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறும், விந்தன் கனகரட்ணத்துக்கு அந்த அமைச்சுப் பதவியை வழங்குமாறும் ரெலோ தீர்மானம் எடுத்திருந்தது.

இந்த தீர்மானத்துக்கு மாறாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், ரெலோ கட்சியை சேர்ந்த ஞா.குணசீலனுக்கு சுகாதார அமைச்சுப் பதவியை வழங்கியிருந்தார். அந்தப் பதவியை குணசீலனும் ஏற்றுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், வவுனியாவில் நேற்றுக் கூடிய கட்சியின் தலைமைக் குழு ஆராய்ந்துள்ளது.

குணசீலனுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சரிடம் கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இணக்கம் தெரிவித்ததாக அவர் மீது சக உறுப்பினர்களால் நேற்றைய கூட்டத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டை அடைக்கலநாதன் அடியோடு மறுத்துள்ளார். கட்சித் தீர்மானத்தை மீறி எதுவும் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர், கட்சித் தீர்மானத்தை மீறி – கட்சிக்கு கட்டுப்படாமல், கட்சிக்கே தெரியாமல் அமைச்சுப் பதவியை குணசீலன் ஏற்றுள்ளார்.

அவருக்கு எதிராக ஏன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது என்பதற்கு விளக்கமளிக்குமாறு கோரி கடிதம் அனுப்ப நேற்றுத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர் நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர்கள் 21 பேரில் 15 பேர் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரது இணக்கத்துடனேயே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

You might also like