யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இராணுவ முகாமிற்கு அருகில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

மன்னார்- யாழ்ப்பாணம் பிரதான வீதி, தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து சுமார் நூறு மீற்றர் தூரத்தில் உள்ள காட்டு பகுதியில் இருந்து எரிந்த நிலையில் ஆண் ஒருவருடைய சடலத்தை இன்று மாலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து சுமார் நூறு மீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் காணப்படுவதாக மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 50 வயதுடைய ஆண் ஒருவர் என மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடல் முழுவதும் எரிந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்திற்கு மன்னார் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

மேலும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதே வேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சடலத்தை பார்வையிட்டார்.

சடலமாக மீட்கப்பட்டவர் இது வரை அடையாளம் காணப்படவில்லை.மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like