முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல்

எதிர்வரும் 2018ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களை அனுமதிப்பதில் பாடசாலை நிர்வாகங்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்ட சுற்று நிருபம் ஒன்றின் பிரகாரம் எதிர்வரும் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையின் போது எந்தவொரு பிரிவிலாவது மாணவர்கள் புள்ளிகளைப் பெறாது போனால் அவர்களுக்கு முதலாம் ஆண்டுக்கான அனுமதி வழங்க வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் நடைபெற்ற நேர்முகத் தேர்வின் போது தங்கள் வதிவிடத்தை உறுதிப்படுத்தத் தவறிய பெற்றோரின் பிள்ளைகள் நிராகரிக்கப்பட்டோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.

எனினும் புதிதாக கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்தின் பிரகாரம் அவ்வாறான மாணவர்களுக்கும் புள்ளி அடிப்படையில் முதலாம் ஆண்டுக்கான அனுமதி வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நிராகரிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் நேர்முகத் தேர்வு வைத்து மாணவர்களை தெரிவு செய்ய முற்பட்டால் அடுத்த ஆண்டில் உரிய காலத்துக்குள் மாணவர்களை பாடசாலையில் அனுமதிக்க முடியாத நிலை ஏற்படலாம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

You might also like