முல்லைத்தீவில் 19,204 ஏக்கர் முழுமையாக அழிவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் 19,204 ஏக்கர் காலபோக பயிர் செய்கை முழுமையாக அழிவடைந்துள்ளதாக மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் விவசாயத்தை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக விசாயத்துறை பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மாவட்ட செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது,

‘முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது 33,200 ஏக்கர் வரையான பயிர் செய்கை அழிவடையும் நிலையில் உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.

தற்போது 19 ஆயிரத்து 206 ஏக்கர் பயிர் செய்கை முழுமையாக அழிவடைந்துள்ளது. அதாவது கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 3,884 ஏக்கரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 2,060 ஏக்கரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 10,028 ஏக்கரும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 795 ஏக்கரும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 829 ஏக்கரும் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 1,608 ஏக்கரும் என 19,204 ஏக்கர் பயிர்செய்கை அழிவடைந்துள்ளது.

இதில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் மொத்தமாக 11692 ஏக்கர் செய்கை பண்ணப்பட்ட நிலையில் 10,028 ஏக்கர் அழிவடைந்துள்ளது. நிவாரண உதவிகளை வழங்கவேண்டிய தேவையுள்ளது’ என்றும் தெரிவித்துள்ளார்.

You might also like