வித்தியாவின் மறு பக்கம்! மனதை நெகிழ வைக்கும் சில சம்பவங்கள்

வித்தியா.. புங்குடுதீவில் கல்வி கற்ற மாணவி, வீட்டின் கடைசி பெண் பிள்ளை இது மட்டுமே அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் வித்தியாவுக்குள் இருக்கும் திறமைகள், அவளது கனவுகள் பற்றி யாரேனும் அறிந்ததுண்டா?

மாங்குளம் வைத்தியசாலையில் சிவலோகநாதன், சரஸ்வதி என்போருக்கு மூன்றாவது பெண் குழந்தையாக பிறந்தவரே வித்தியா.

வித்தியாவின் திறமைகள், அவளது குறும்புத்தனங்கள் குறித்து வித்தியாவின் தாயாரான சிவலோகநாதன் சரஸ்வதி சில கருத்துக்களை எம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

சிறு வயதிலிருந்தே கல்வியிலும், சமையலிலும், விளையாட்டுப் போட்டியிலும், வரைதலிலும், நடனத்திலும், ஆங்கிலப்பாடத்திலும் சிறந்து விளங்கினாள்.

வீட்டின் கடைசிப் பெண் பிள்ளை. இவளுக்கு அக்காவும், அண்ணாவும் இருக்கின்றார்கள். வீட்டில் அனைவருக்குமே செல்லப்பிள்ளையாம் வித்தியா.

அவள் கேட்டதை வாங்கிக்கொடுப்பாராம் அவரது அண்ணா. அக்காவுக்கு கிடைக்காத அனைத்தும் வித்தியாவுக்கு கிடைக்குமாம். அனைவரும் அவளை உயிராக நினைத்தார்களாம். தாய், தந்தைக்கு மிகுந்த பணிவுடன் இருப்பவள்.

அவளது கனவு சிறந்த ஊடகவியலாளராக வரவேண்டும் என்பதே. இதையே தனது கனவு என்றும், இலட்சியம் என்றும் அடிக்கடி கூறுவாராம் வித்தியா.

சிறு வயதிலிருந்தே படிப்பில் கெட்டிக்காரியாம் வித்தியா. பாடசாலை முடிந்த பின்னும் தமது தமக்கையின் வரவுக்காக 2 மணி வரை பாடசாலையிலேயே இருப்பாராம்.

படிப்பதில் எப்படி கெட்டிக்காரியோ அதேபோல் சமைப்பதிலும் வித்தியா கெட்டிக்காரியாம்.

அனைவரிடமும் அன்பாக பழகும் சுபாவமுடையவள். உயிர்களிடத்தில் அதீத அக்கறை உள்ளவள். யாருடனும் சண்டைக்கு போகாத இலகிய மனம் படைத்தவள்.

இந்த தங்கத்தை இழந்து நானும் எனது குடும்பத்தாரும் தவிக்கின்றோம். எனக்கும் நோய், வித்தியாவை நினைத்து எனது கணவருக்கும் நோய்.

அவளது பிரிவால் அனைவரும் கவலையில் வாடுகின்றோம் என தெரிவித்தார் வித்தியாவின் தாய்.

You might also like