புதுக்குடியிருப்பு பிரதேச கலாசார பேரவை தெரிவும், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான பிரேரணையும்

வன்னியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படைப்பாளிகளுக்கான ஒன்றுகூடல் இடம்பெற்றது.

வன்னி குரோஸ் கலாசாரப் பேரவை ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலானது, 22.01.2017 சனிக்கிழமை பிற்பகல் 04.00 மணிக்கு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்விற்கு வன்னி குரோஸ் கலாசாரப் பேரவையின் முல்லைத்தீவு மவட்ட தலைவரும், முத்துஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபருமான சி.நாகேந்திரராசா தலைமை வகித்தார். சுடர்கள் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கலாசார பேரவை உருவாக்கத்தின் முக்கியத்துவம் குறித்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் திரு.பிரதீபன் அவர்கள் விளக்கமளித்தார். வன்னி குரோஸ் கலாசார‌ பேரவையின் முன்னுதாரணமிக்க‌ செயற்பாடுகளையும் அவர் பாராட்டினார்.

தொடர்ந்து இந்த கலாசார பேரவையின் செயற்பாடுகளை முன்னெடுப்பவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் கருத்துரை வழங்கினார். அவர் தனதுரையில், அழிந்து போகின்ற சில பாரம்பரிய கலைகளை மீளுருவாக்கல் பற்றி தனது பிரதான நோக்கத்தினை முன்வைத்தார். முக்கியமாக தப்பாட்டம் போன்ற கலைகள் காக்கப்படவேண்டியதை சுட்டிக்காட்டிய அவர், இயல், இசை, நாடகம் போன்ற முத்தமிழ் சார்ந்த போட்டிகளை நாடாத்தியும் தொடரான கலாசார முன்னெடுப்புக்களை கொண்டுசெல்ல வேண்டிய அவசியத்தையும் வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேச வன்னி குறோஸ் கலாசாரப் பேரவையின் நிர்வாகத்தெரிவு இடம்பெற்றது. தலைவாராக இசைக்கலைஞர் ராஜன் அவர்களும், செயலாளராக கவிஞர் ஜெயம் ஜெகன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டதோடு, நிர்வாக ரீதியிலான 13 அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகிய ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு ஏற்படுத்தப்படடிருக்கும் தடையினை நீக்கவேண்டும் எனும் தீர்மானமும் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தினை படைப்பாளர் யோ.புரட்சி கொண்டுவந்து அவை சார்ந்த விளக்கங்களையும் வழங்கினார். கலாசார பேரவையின் தொடரான பணி முன்னெடுப்பு குறித்த விளக்கங்களை  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்களின் இணைப்பாளர் சுடர் வழங்கினார்.  தொடர்ந்து பணி முன்னெடுப்பு பற்றிய கருத்துக்களை புதிதாக தெரிவுசெய்யப்பட்ட தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டுக்கு எதிராக இருக்கின்ற தடைக்கு எதிராக படைப்பாளர்கள் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பினர். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன் மற்றும் வ‌ன்னி குரோஸ் கலாசரப் பேரவையின் முல்லைத்தீவு மாவ‌ட்ட தலைவரும், முத்துஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபருமான சி.நாகேந்திரராசா ஆகியோரும் இத்தடைக்கு எதிரான தமது கருத்துக்களை முன்வைத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன்  அவர்கள், ‘இத்தடைக்கு எதிராக தமிழகத்தில் ஒன்றுதிரண்டிருக்கும் தமிழ் உறவுகளோடு நமது கரங்களையும் இணைத்துக்கொள்கின்றோம்’ என்றும் மேலும் சில வலுவான கருத்துக்களையும் முன்வைத்தார்.

இந்த கலாசரப் பேரவையின் உறுப்பினர்களாக அனைத்து படைப்பாளர்களும் தம்மை இணைத்துக்கொண்டனர். செயலாலரின் நன்றியுரையுடன் பேரவையின் கூட்டம் நிறைவுபெற்றது.

You might also like