வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் போராட்டம்

வவுனியாவில் எதிர்வரும் திங்கட்கிழமை (09.10.2017) காலை 10.00 மணிக்கு வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்ற முறையில் உடன் விடுதலை செய்யுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்தில் இன்று (05.10.2017) மாலை 3.30மணியளவில் அரசியல் கைதிகள் தொடர்பான கலந்துரையாடல் பொது அமைப்புக்களின் பங்கு பற்றலுடன் இடம்பெற்றது.

இதன் போது பல்வேறு வாதபிரதிவாதங்கள் இடம்பெற்றன. இறுதியில் இதை தொடர் போராட்டமாக வலியுறுத்தி மேற்கொள்வதற்கும் தனியான ஒரு அமைப்பினரை உருவாக்கி சிறைச்சாலைகளில் விசாரணைகள் இன்றியும் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே நிபந்தனையற்ற முறையில் விடுதலை செய்வதற்கு மத்திய அரசை வலிறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை எதிர்வரும் திங்கட்கிழமை நடாத்துவதற்கும் அதனைத் தொடர்ந்து அடுத்து வரும் வாரங்களில் தொடர் போராட்டங்களை மேற்கொள்வதற்கும் கலந்துரையாடலில் முடிவுகள் எடுக்கப்பட்டன.

இப்போராட்டத்திற்கு கட்சி பேதமின்றி அரசியல் கைதிகளின் நலனில் அக்கறையுள்ள அனைத்து தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறும் கோரிக்கை விடப்பட்டுள்ளதுடன் வடகிழக்கு மாகாணங்களிருந்தும் ஆதரவினை வேண்டி நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இன்றைய கலந்துரையாடலின்போது வவுனியா மாவட்டத்திலுள்ள பொது அமைப்புக்கள், வர்த்தகர் சங்கம், சமூக அமைப்புக்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், மகளிர் அமைப்புக்கள், கிராம அமைப்புக்கள் என 20ற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like