கிளிநொச்சியில் பாடசாலைக்கு செல்லாத சிறார்கள் தொடர்பில் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

கிளிநொச்சி – கல்மடு நகர் பகுதியில் பாடசாலைக்கு செல்லாத அல்லது ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட சிறார்களை மீள கற்றலில் இணைக்கும் செயற்பாடுகள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி – கல்மடு நகர், நாவல் நகர், றங்கன் குடியிருப்பு ஆகிய பகுதியில் பாடசாலைகளுக்கு செல்லாத அல்லது ஒழுங்கற்ற வரவுகளை கொண்ட அதிகளவான சிறுவர்கள் காணப்படுவதாகவும் இதனால் இப்பகுதிகளில் இவ்வாறான சிறுவர்கள் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்களில் ஈடுபடுவதாகவும் கிராம மட்ட பொது அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக மாவட்டசிறுவர் நன்னடத்தை அதிகாரிகள், கிராம அலுவலர்கள், பொலிஸார் இணைந்து பாடசாலை செல்லாத அல்லது ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட சிறார்களை மீளக்கற்றலில் இணைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை இப்பகுதியில் மேற்கொண்ட விசேட வேலைத்திட்டத்தின் கீழ், இவ்வாறு காணப்பட்ட எட்டு சிறார்கள் கைது செய்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதில் ஆறு சிறுவர்களை கடுமையாக எச்சரித்து மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைத்ததுடன், இரண்டு சிறுவர்களை சிறுவர் இல்லத்தில் வைத்து பராமரிக்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.

You might also like