கந்தபுரம் கரும்புத் தோட்டக்காணி தொடர்பில் வட மாகாண முதலமைச்சருக்கு கடிதம்

>கந்தபுரம் கரும்புத்தோட்டக்காணி தொடர்பில் கரைச்சிப்பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை கடிதம் மூலம் வட மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைத்திருப்பதாக கரைச்சிப்பிரதேச செயலாளர் ரி.முகுந்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – அக்கராயன்குளத்தின் கீழ் இராணுவத்திடம் இருந்து விடுவிக்கப்பட்ட கரும்புத்தோட்டக்காணி 210 ஏக்கரையும் காணிகளற்ற மக்களுக்கு பயிர்செய்கைக்கு பகிர்ந்தளிக்குமாறு பல்வேறு தரப்புக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அண்மையில் பிதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் குறித்த காணியினை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கரைச்சி பிரதேச செயலாளர், அக்கராயன் கரும்புத் தோட்டக்காணியை அப்பகுதி மக்களுக்கே பகிர்ந்தளிப்பதற்கு வட மாகாண காணி அமைச்சர் என்ற வகையில் வட மாகாண முதலமைச்சர் அனுமதியை வழங்க வேண்டும்.

அக்கராயன் கரும்புத்தோட்ட காணியை அக்கிராமங்களில் வாழுகின்ற நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கவேண்டுமென ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அன்றைய கூட்டத்திற்கு வட மாகாண முதலமைச்சர் சமூகமளிக்காததால் மாவட்டத்தின் ஏனைய தலைவர்கள் இணைந்து இந்தத்தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் மேற்படி தீர்மானத்தை நிறைவேற்றவும், விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையிலும் இந்த விடயத்தை விளக்கி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

You might also like