முல்லைத்தீவில் விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்ட காலமாக ஆயுதம் தயாரித்து வந்தவர் கைது

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த நபர் விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்ட காலமாக ஆயுத உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத முறையில் கட்டுத் துப்பாக்கிகள் தயாரித்த நபர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன் போது குறித்த பகுதியில் பெருமளவான ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் அந்த பகுதியில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது அந்த பகுதியிலிருந்து கட்டுத்துவக்கு 19, முழுதாக தயாரிக்கப்பட்ட துவக்கு 3, வெடிமருந்து 1 கிலோ கிராம், துப்பாக்கி குண்டுகள் 2000 மற்றும் துப்பாக்கி தயாரிக்கும் உபகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியிருந்தனர்.

இந்நிலையிலேயே, சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த நபர் விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்ட காலமாக ஆயுத உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, சந்தேகநபரை நேற்று நீதிமன்றில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியிருந்த நிலையில் அவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like