முக்கொம்பன் கிராமம் வழியாக யாழிற்கு மணல் கொண்டு செல்லப்படுவதாக குற்றச்சாட்டு

பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்களை மீறி முக்கொம்பன் கிராமம் வழியாக யாழ்ப்பாணத்திற்கு மணல் கொண்டு செல்லப்படுவதாக முக்கொம்பன் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

முக்கொம்பன் கிராமத்திலிருந்து பத்தாங்கட்டை வரை கொங்கிறீட் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக நாள்தோறும் இருபதிற்கு மேற்பட்ட மணல் டிப்பர்கள் பயணிக்கின்றன.

இதன் காரணமாக கொங்கிறீட் வீதி சேதமடைகின்றது. இது தொடர்பாக பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் இணைத்தலைவர்களிடமும், அதிகாரிகளிடமும் முறைப்பாடுகள் செய்தோம்.

டிப்பர்கள் இனி மணலுடன் பயணிக்காது என உறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் ஓராண்டு கடந்தும் கூட மணல் டிப்பர்கள் எமது கிராமம் வழியாகவே பயணிக்கின்றன.

அக்கராயனுக்கும் எமது கிராமத்திற்கும் இடையிலான நான்கு கிலோமீற்றர் வீதி குன்றுங்குழியுமாக மாறியுள்ள நிலையில் குறித்த கொங்கிறீட் பாதையையாவது காப்பாற்ற வேண்டிய தேவை எங்களிடம் உள்ளது.

களவாக மணல் கொண்டு செல்வதற்கே எமது வீதி பயன்படுத்தப்படுகின்றது என்பது தொடர்பாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளருக்கும் பூநகரி பிரதேச செயலாளருக்கும் தகவல்கள் வழங்கப்பட்டும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

குடமுருட்டி, கண்ணகைபுரம், அக்கராயன் ஆற்றுப் பகுதிகளில் களவாக அகழப்படும் மணலே எமது வீதி வழியாக கொண்டு செல்லப்படுகின்றது.

இது தொடர்பில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாம் தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

You might also like