உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் இளைஞர்களின் பிரதி நிதித்துவம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.! கேசவன்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட பயிற்சி நிலைய மண்டபத்தில் இன்று (07.10.2017) மாலை 4.30மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீகரன் கேசவன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் இளைஞர் பாராளுமன்றத்தின் 04வது சபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாகவும் இளைஞர் பாராளுமன்த்தினால் வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் வவவுனியா மாவட்டத்தின் சாதனைகள் தொடர்பாகவும் இளைஞர் யுவதிகள், பொது மக்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் இந்த ஊடாக சந்திப்பை ஒழுங்கமைத்திருந்தோம்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இளைஞர் பாராளுமன்றம் இளைஞர் யுவதிகளை அரசியலில் ஈடுபடுத்துவதையும், அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர் யுவதிகளுக்கு வாய்ப்பளிக்கும் முகமாக வருடாந்தம் அகில இலங்கை ரீதியில் தேர்தல் நடாத்தப்பட்டு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்.

அந்த வகையில் கடந்த வருடம் மார்கழி மாதம் 18 ம் திகதி 4வது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இளைஞர்களால் தெரிவு செய்யப்பட்ட வவுனியா மாவட்டத்தின் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன்.

அதன் அடிப்படையில் இளைஞர் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள், முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக இளைஞர் யுவதிகள், பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை எனக்குண்டு.

அந்தவகையில் இளைஞர் பாராளுமன்றத்தின் 4வது சபை அமர்விலே எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக அறியத்தருகின்றேன்.

இலங்கை பாராளுமன்றத்தில், 2012 இல 22 உடைய உள்ளூராட்சி மன்றங்களின் திருத்த சட்டமூலத்தின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலில் இளைஞர் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

1990 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு அதன் பின்னர் 1991,1997,2002,2006,2011 ஆகிய உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்களின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட இளைஞர் பிரதிநிதித்துவத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பம் 2017 ஜூன் 2ம் திகதி நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டமூலத்தை மூலம் இளைஞர் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக இளைஞர் யுவதிகள் அரசியலில் பிரவேசிக்கும் பாதை தடைபட்டுள்ளது. இது தொடர்பாக 2017 ஆகஸ்ட் 25ம் திகதி நடைபெற்ற 04 வது இளைஞர் பாராளுமன்ற சபை அமர்வின் போது, இளைஞர் பிரதிநிதித்துவ சந்தர்ப்பம் மறுக்கப்பட்டதை அடுத்து இளைஞர் யுவதிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு தெரியப்படுத்தி .”யூத் டு லீட்” தொனிப்பொருளில் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர், கௌரவ எதிர்க்கட்சி தலைவர், சகல கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு தெரியப்படுத்தி உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டம் மூலத்தின் மூலம் இளைஞர் பிரதிநிதித்துவத்திற்கு கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது.

கட்சிகளின் ஊடாக வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது இளைஞர்களுக்கு பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படுவதோடு கட்சி தலைவர்களை வலியுறுத்தி மிக விரைவில் மீளவும் உள்ளூராட்சி மன்ற திருத்த சட்டம் மூலத்திற்கு மீளவும் இளைஞர் பிரதிநிதித்துவம் இணைப்பது தொடர்பாக அனைத்து அரசியற் கட்சிகளினுடைய தலைவர்களுக்கும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும் 04 வது இளைஞர் பாராளுமன்றம் ஊடாகவும் வேண்டுகோள் விடுவதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக தமிழ் தலைமைகள் இளைஞர் யுவதிகளுக்கு வாய்ப்பளித்து வினைத்திறனான சமூகத்தை உருவாக்குவதற்கும், எதிர்காலத்தில் தூய்மையான அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு துணை நிற்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் ஊடக சந்திப்பில் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் சு.காண்டீபன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் க.சிம்சுபன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like