தாயகம் திரும்பிய தமக்கு உதவிகள் கிடைப்பதில்லை : கிளிநொச்சியில் மக்கள் ஆதங்கம்

அகதிகளாக இந்தியா சென்று தற்போது தாயகம் திரும்பிய தாம் பாரிய சவால்களை எதிர்நோக்குவதாகவும் தமக்கான உதவித்திட்டங்கள் சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் நாடு திரும்பியுள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை கேட்டறியும் கலந்துரையாடல் ஒன்று 21.01.2017 (சனிக்கிழமை) கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றபோது, மக்கள் இவ்வாறு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலின்போது, தாயகம் திரும்பிய தமக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லையென மக்கள் குறிப்பிட்டனர்.

தற்போது உறவினர் மற்றும் அயலவர்களின் வீடுகளில் பாரிய சிரமங்களின் மத்தியில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கும் இவர்கள், தாம் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் அமைப்போ அல்லது இலங்கை அரசோ எவ்வித உதவிகளும் செய்யவில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.

You might also like