வடக்கில் மக்களை குழப்பிய ஹை ரோட் செயற்றிட்டம் : ப.சத்தியலிங்கம்

வடமாகாணத்தில் 1000 கிலோ மீற்றர் நீளமான பிரதான மற்றும் உள்ள வீதிகளை ஹை ரோட் செயற்றிட்டத்தின் ஊடாக புனரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மேற்படி ஹை ரோட் செயற்றிட்டம் 2019ம் ஆண்டே ஆரம்பிக்கப்படவுள்ளமையினால் மக்கள் குழப்பமடைந்துள்ளதுடன், வீதிகளை புனரமைப்பு செய்யும்படி போராட்டம் நடத்துவதாக மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கூறியுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

ஹை ரோட் செயற்றிட்டத்தின் கீழ் 1000 கிலோ மீற்றர் நீளமான பிரதான வீதிகள் மற்றும் உள்ளக வீதிகள் புனரமைப்பு செய்யப்படவிருந்தது.

இதற்கமைய விசேட கவனம் எடுத்து புனரமைக்கப்பட வேண்டிய வீதிகளை கவனத்தில் எடுத்து 2015ஆம் ஆண்டு ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் 200 கிலோ மீற்றர் நீளமான வீதிகளை மாகாணசபை உறுப்பினர்கள் பரிந்துரை செய்திருந்தனர்.

இதற்கமைய வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் புனரமைப்பு செய்யப்படவிருக்கும் வீதிகளின் பட்டியலும் வெளியாகியிருந்தது.

மேலும் மத்திய வீதி அபிவிருத்தி அதிகாரசபை வீதிகளை புனரமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதனால் வீதிகள் புனரமைப்பு செய்யப்படவிருக்கிறது என மக்கள் நம்பியிருந்த நிலையில் மேற்படி ஹை ரோட் செயற்றிட்டம் 2019ம் ஆண்டிலேயே தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மோசமான நிலையில் இருக்கும் வீதிகள் மேலும் மோசமாகும் நிலையில் மக்கள் தங்கள் வீதிகளை புனரமைக்க கோரி கடந்த சில தினங்களாக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக கடந்த திங்கள் கிழமை பூவரங்குளம் மன்னார்- வவுனியா வீதியை வழிமறித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியுள்ளதுடன், வீதியை உடனடியாக புனரமைக்கும்படி கேட்டிருக்கின்றார்கள்.

மக்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை. காரணம் மேற்படி ஹை ரோட் செயற்றிட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்பட்ட வீதிகள் ஏற்கனவே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீள்குடியேற்ற பகுதிகளில் உள்ள பல வீதிகளும் புனரமைப்பு செய்யப்பட்டன. அவற்றினால் மக்கள் பலத்த அசௌகரியங்களை எதிர்கொள்கின்றார்கள் என சத்தியலிங்கம் கூறினார்.

மேற்படி விடயம் தொடர்பாக கடந்த 6 ம் திகதி நடைபெற்ற வடமாகாண சபையின் 107வது அமர்விலும் சுட்டிக்காட்டினார்.

அப்போது மேற்படி விடயம் தொடர்பாக உடனடியாக மத்திய அரசாங்கத்துடன் பேசி ஹை ரோட் செயற்றிட்டத்தை நடை முறைப்படுத்தும்படி கோருவதென தீர்மானிக்கப்பட்டது.

மேலும் மாகாண சபையில் ஆளுங்கட்சியின் இயலாமையே ஹை ரோட்செயற்றிட்டம் பின்தள்ளி போகின்றமைக்கு பிரதானமான காரணம் என எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like