வவுனியா தேக்கவத்தை மக்கள் என்ன பகடைக்காய்களா? மக்கள் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தால் வழங்கப்படும் வறட்சி நிவாரணத்தில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்து வவுனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவு மக்கள் இன்று காலை 8.30 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை பிரதேச செயலாளர், அலுவலகத்திற்கு வருகை தந்த போது தங்களுக்கு பதில் தந்து விட்டு செல்லுமாறு வாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘மனசாட்சி இல்லாத உத்தியோகத்தரே உன் மனம் என்ன கல்லா, தேக்கவத்தை மக்கள் என்ன பகடைக்காய்களா, அயல் கிராமங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் எமது கிராமத்திற்கு ஏன் வழங்கப்படவில்லை, தோணிக்கல் கிராம அலுவலரே பதில் கூறு’ போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த பகுதி கிராம அலுவலகரை அழைத்த பிரதேச செயலாளர், மக்களுக்கு ஏன் வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என்பதை தெளிவுப்படுத்துமாறு கோரியுள்ளதுடன், மக்கள் சார்பாக மூவரை அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இருப்பினும் அந்த பேச்சுவார்த்தையில் திருப்தியடையாத மக்கள் பிரதேச செயலகத்தில் இருந்து ஊர்வலமாக மாவட்ட செயலகத்தை அடைந்து அரச அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.

இதன்போது, மாவட்ட செயலக வாயிலை மக்கள் மறிக்க முற்பட்ட போது குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் மக்களுடன் பேசி அவர்களை சமரசம் செய்துள்ளனர்.

அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார, இது தொடர்பில் விசாரணை செய்து நாளைய தினம் பதில் வழங்குவதாக தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

எமது கிராமத்தில் வறுமையால் பாதிக்கப்பட்டவர்களும், 70 மேற்பட்ட விதவைக் குடும்பங்களும் இருக்கின்றார்கள். இருப்பினும் எவருக்கும் வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை.

அயல் கிராமங்களில் பரவலாக வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் எமது கிராமத்திற்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. எனவே கிராம அலுவலரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கிராம அலுவலரிடம் வினவிய போது,

வவுனியாவில் அதிக சனத்தொகை கொண்ட கிராமமாக எமது பிரிவே உள்ளது. எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுற்று நிரூபத்திற்கு அமைவாக 8 குடும்பத்திற்கு மட்டுமே வறட்சி நிவாரணம் வழங்க முடியும். அதனையே தான் செய்ததாக கூறியுள்ளார்.

You might also like