வவுனியாவில்தேசிய விவசாயிகள் வாரத்தினை முன்னிட்டு பாடசாலைகளுக்கு இடையில் விவசாய புதிர் போட்டி

தேசிய விவசாயிகள் வாரத்தினை முன்னிட்டு வவுனியாவில் மாவட்ட விவசாயத் திணைக்களத்தால் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் வவுனியா தெற்கு கல்வி வலயத்துடன் இணைந்து கடந்த 6, 10 மற்றும் 17 ஆம் திகதிகளில் விவசாய புதிர் போட்டிக்கான எழுத்து பரீட்சைகள் நடைபெற்றுள்ளன.

இதில் வவுனியா தெற்கு வலயத்தின் க.பொ.த உயர்தரத்தில் விவசாய பாடநெறி கற்பிக்கும் ஏழு பாடசாலையை சேர்ந்த 32 மாணவ, மாணவிகளுக்கு இடையே பாடசாலை மட்ட போட்டி நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது பாடசாலை மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட முதல் மூன்று மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து தெரிவான பாடசாலை மட்ட போட்டியாளர்களிகு இடையில் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு மூன்று பாடசாலைகள் அரை இறுதிச்சுற்றுக்கு தெரிவாகின.

இறுதிச்சுற்றில் வவுனியா இறம்பைக்குளம் ம.வி, வவுனியா செட்டிகுளம் ம.வி ஆகியன போட்டியிட்டு அதில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் வெற்றியீட்டியுள்ளது.

வலயமட்டத்தில் முதல் மூன்று இடங்களை பெற்ற பாடசாலைகளிற்கு வெற்றி கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இறுதிச்சுற்றில் போட்டியிட்ட பத்து மாணவிகளுக்கு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் நினைவு பரிசாக பழ மரக்கன்றுகள் வழங்கி கௌரவித்துள்ளார்.

மேலும், இந்த செயற்பாடு விவசாயம் கற்கும் பாடசலை மாணவர்களிற்கு புதிய உத்வேகத்தினை வழங்குவதுடன், அவர்களிடையே சூழல் தொடர்பான பற்றுதலை ஏற்படுத்துவதாகவும் அமைகின்றது என குறிப்பிடப்படுகின்றது.

You might also like