நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மீது தாக்குதல்!

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் மீது இன்று பிற்பகல் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட செயலக காணி ஆணையாளர் விமல், நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனை தாக்கமுற்பட்டபோது அதனை தடுக்க முயற்சி செய்த யோகேஸ்வரனின் மெய்பாதுகாவலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்று பிற்பகல் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் மட்டக்களப்பு அலுவலகத்திற்கு சென்றுள்ள் மட்டக்களப்பு மாவட்ட காணி ஆணையாளர் விமல் தன் மீது அவதூறான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைப்பதாக கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், காரியாலயத்தை விட்டு வெளியேறுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கூறியதை கேட்காது அவர் மீது தாக்கமுற்பட்டபோது அதை நாடாளுமன்ற உறுப்பினரின் மெய்பாதுகாவலர் தடுக்க சென்றவேலையில் அவருடைய தலையில் அடிபட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாருக்கு உடனடியாக அறிவித்ததை அடுத்து இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் விரைவாக மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கருத்து வெளியிடுகையில்,

அரசாங்க அதிபரின் இடமாற்றத்தை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தன்னை தாக்க முற்பட்டதாகவும் அதன் போது தனது மெய்பாதுகாவலரின் தலை உடைந்து காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் அரசாங்க அதிபருடன் இணைந்து செயற்பட காணி ஆணையாளர் விமல் அவரை அவரே சுட்டுக்கொண்டதாக கூறியதுடன், முஸ்லீம்களுக்கு காணி விற்றதாக அரசாங்க அதிபரிடம் தன்னைப்பற்றி பிழையாக கூறியதாக கூறி என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதே இவ்வாறு நடந்தது.

பணி நேரத்தில் அரச வாகனத்தில் மனைவி மற்றும் இரண்டு பொலிசாருடன் எனது இடத்திற்கு வந்து என்னை தாக்க முயற்சித்ததுடன் எனது மெய்பாதுகாவலரை காணி ஆணையாளர் விமல் காயப்படுத்தியுள்ளார்.

அவரை என்னால் கைது செய்திருக்க முடியும், அவரது குடும்பத்தை கருத்திற் கொண்டு மன்னித்து விட்டுள்ளேன். ஆனால் இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்று எனக்கு தெரியும்.

அவர்களை இந்த மாவட்டத்தில் இருந்து அகற்றியும் அவர் கொழும்பில் இருந்துகொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தை இயக்க முற்படுகிறார் அது ஒரு போதும் நடக்காது என சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like