கிளிநொச்சியில் போதியளவு விதைநெல் கையிருப்பில் இருக்கின்றன: பி.உகந்தன்

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற காலபோக செய்கைக்குத் தேவையான, போதியளவு விதைநெல் கையிருப்பில் இருப்பதாக மாகாண பிரதி விவசாயப்பணிப்பாளர் பி.உகநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது காலபோக நெற்செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாவட்டத்தில் விதைநெல்லுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

இது குறித்து கருத்துத் தெரிவித்த பிரதி விவசாயப்பணிப்பாளர்,

இம்முறை கிளிநொச்சி மாவட்டத்தில் 23 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ள எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதில் 70 வீதமான நிலங்களில் புழுதி விதைப்புக்களாக விவசாயிகள் நெற் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏனைய நிலங்களிலும் பயிர் செய்கைகளை மேற்கொள்வதற்கு விவசாயிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

மாவட்டத்தில் விதைநெல் தட்டுப்பாடு எதுவும் இருப்பதாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை. ஒருங்கிணைந்த மாதிரிப் பண்ணையாளர் சங்கம் மற்றும் விதை உற்பத்திப்பண்ணை ஆகியவற்றில் போதியளவு விதை நெல் கையிருப்பில் இருக்கின்றன.

இதேவேளை, பொலன்னறுவை போன்ற இடங்களில் இருந்தும் நெல்லை எடுத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இவ்வாண்டு 500 ஏக்கர் நிலப்பரப்பில் கச்சானும், 100 ஏக்கரில் கௌபியும், 200 ஏக்கரில் உழுந்தும், 200 ஏக்கரில் எள்ளும் 100 ஏக்கரில் பயறும் பயிரிடுவதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like