இரணைதீவில் காணிகளை அளவீடு செய்ய அனுமதி கிடைக்கவில்லை

கிளிநொச்சி இரணைதீவில் நிலஅளவைத்திணைக்கள அதிகாரிகள் தங்கி நின்று காணிகளை அடையாளப்படுத்தி அளவீடு செய்வதற்கான அனுமதிகள் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து இதுவரை கிடைக்கப்பெறவில்லை என பூநகரிப் பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப்பிரதேச செயலர் பிரிவின்கீழ் உள்ள மிகவும் கடல் வளம் கொண்ட பிரதேசமான இரணைதீவு பிரதேசம் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதனால் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இரணைமாதா நகரில் தங்கி உள்ளனர்.

 இந்நிலையில், தமது சொந்த இடத்தில் மீள்குடியேற அனுமதிக்கக்கோரி கடந்த மே மாதம் 1ஆம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஐந்து மாதங்களிற்கு மேலாக இந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 31ஆம் திகதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை அடையாளப்படுத்தி அவற்றை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, கடந்த மாதம் பிரதேச செயலர் தலைமையிலான குழுவொன்று இரணைதீவிற்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு வந்தனர்.

நேற்று முன்தினம்(10) இரணைதீவிற்குச்சென்று நில அளவை செய்வதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கோரப்பட்டபோதும், இதுவரை அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் இன்று பூநகரிப் பிரதேச செயலர் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது,

ஏற்கனவே கடற்படையினர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்ட கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இரணைதீவிற்குச் சென்று அங்குதங்கி காணிகளை அளவீடுவதற்கு மாவட்ட அரச அ திபர் ஊடாக பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதிக்காக கடிதத்தை அனுப்பியிருக்கின்றோம்.

ஆனால், அதற்கான அனுமதிகள் இதுவரையும் கிடைக்கவில்லை. அனுமதி கிடைத்தால் வேறொரு தினத்திலாவது அதனை அளவீடு செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like