கிளிநொச்சியில் 235ஆவது நாளாக போராடும் மக்களுடன் ஐ.நா விசேட அறிக்கையாளர்
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு தீர்வு வேண்டி கிளிநொச்சி – கந்தசாமி கோவிலுக்கு முன்பாக 235ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் இன்று நேரில் சென்று சந்தித்துள்ளார்.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாம் அறிந்து கொள்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை பெற்றுத் தருமாறு பப்லோ டி கிரிப்பிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளித்த பப்லோ டி கிரிப்,
இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்த வேண்டிய இடங்களுக்கு தாம் தெரியப்படுத்துவதாக கூறிச் சென்றுள்ளார்.
இதேவேளை 14ஆம் திகதி ஜனாதிபதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிய கிடைத்துள்ளதாகவும், ஏற்கனவே ஜனாதிபதியால் வழங்கப்பட்ட வாக்குறுதி 4 மாதங்களை கடந்தும் நிறைவேற்றப்படாத நிலை தமக்கு கவலை அளிப்பதாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சிக்கு வருகை தரும் ஜனாதிபதி தம்மில் சிலரை சந்தித்து பிள்ளைகள் தொடர்பில் நல்லதொரு முடிவை பெற்றுத்தர வேண்டும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.