உரிய பதிலைத் தந்துவிட்டு யாழ்ப்பாணம் வருக! ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நியாயமானவையாகும். அவற்றைப் புறந்தள்ள முடியாது.

நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு வர இருக்கின்றார். அவர் தனது வருகைக்கு முன்னர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நல்ல ஒரு பதிலைத் தரவேண்டும்.

பதிலைத் தந்துவிட்டே ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வரவேண்டும். இதுவே யாழ்ப்பாண ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்பார்ப்பாகும் என யாழ்ப்பாண மாவட்ட வணிகர் கழகம் தெரிவித்தது.

இது தொடர்பில் அந்தக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“தமிழ் மக்களின் ஆதரவுடனே இந்த அரசு பதவிக்கு வந்தது. ஆனால், தமிழ் மக்களின் எந்தவொரு பிரச்சினையையும் அரசு முற்று முழுதாகத் தீர்த்து வைக்கவில்லை. இது கவலை தரும் விடயமாகும்.

அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம், தனியார் காணிகளை இராணுவத்திடம் இருந்து விடுவிக்கும் செயற்பாடு என எதிலுமே திருப்தியளிக்கும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படவில்லை.

வவுனியாவில் உள்ள நீதிமன்றங்களில் சாட்சிகளை முன்னிலைப்படுத்துவதில் பாதுகாப்புப் பிரச்சினைகள் இருப்பதாகக் கூறி தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் அநுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.

கைதிகள் அநுராதபுரம் சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமன்றி இவர்களது குடும்பத்தினரும் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

அரசு இந்த விடயத்தில் இனியும் இழுத்தடிப்புகளை மேற்கொள்ள முடியாது. உடனடியாக கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

இல்லையேல் அவர்கள் நிரந்தரமாக வதியும் மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் அவர்களைப் பாரப்படுத்த வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் எமது மக்களின் நியாயமான போராட்டங்கள் மற்றும் கவனயீர்ப்புகள் புறந்தள்ளிவிட முடியாதவை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like