12 வருடங்களுக்குப்பின் கிளிநொச்சி தமிழ் இளைஞனுக்கு கிடைக்கும் தீர்ப்பு?

2004ஆம் ஆண்டு கொழும்பு நீதிமன்றில் தாக்கல் செய்த கொலை வழக்கில் சட்டமா அதிபர் பயங்கரவாத தடைச் சட்டத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக எதிரியின் சட்டத்தரணியான கே.வி தவராசா கொழும்பு விசேட நீதிமன்றில் கடும் வாதம் செய்துள்ளார்.

2003ம் ஆண்டு ஆனி மாதம் 23ம் திகதி தெஹிவளை பொலிஸ் விடுதிக்குள் சென்று புலனாய்வுப்பிரிவு பொறுப்பதிகாரி சுனில் தாப்ருவை சுட்டுக்கொலை செய்ததாகவும், துப்பாக்கியை உடைமையில் வைத்திருந்ததாகவும் கிளிநொச்சியை பிறப்பிடமாகக் கொண்ட செல்லத்துரை கிருபாகரனுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இவருக்கு எதிராக 42 அரச சாட்சிகளையும் 27 தடயப் பொருட்களையும் சான்றாகக் கொண்டு 2004ம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யபட்டது.

இந்த வழக்கு கடந்த 12 வருடங்களாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அரச சாட்சியாக 24 சாட்சிகளின் விசாரணை முடிவடைந்த நிலையில் எதிரி தரப்பால் எதிரி சாட்சியமளித்தார்.

அரச தரப்பாலும் எதிரிதரப்பாலும் விசாரணைகள் முடிவடைந்த பின்னர் அரச தரப்பு தனது சமர்பனத்தில்,

“இந்த வழக்கின் எதிரி புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பதிகாரிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றிய இரகசிய தகவல்களை வழங்குவதற்காக தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு வருபவர்.

2003ஆண்டு ஆனி மாதம் 23ம் திகதி புலனாய்வுப்பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் விடுதியின் ஒய்வு அறையில் தூங்கிக் கொண்டிருக்கையில் இந்த எதிரி பொலிஸ் விடுதியின் உட்புகுந்து பொறுப்பதிகாரியை கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து விட்டு முச்சக்கரவண்டியில் தப்பி ஓடும் பொழுது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்படும் பொழுது எதிரி சைனையிட் வில்லையை விழுங்கி தற்கொலை செய்துகொள்ள முயன்ற பொழுது பொலிஸாரால் தடுக்கப்பட்டு பின்னர் களுபோவிலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வைத்திய சிகிச்சையளிக்கப்பட்டார்.

பின்னர் புலன் விசாரணையில் எதிரி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலைக்கு எதிரியினால் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கியும் 5 ரவைகளும் கண்டெடுக்கப்பட்டதுடன் அடையாள அணிவகுப்பில் எதிரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் எனவே எதிரிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டுள்ளமையால் எதிரிக்கு அதி உச்ச தண்டணை வழங்கும்படி” தனது வாதத்தை முடித்துக் கொண்டார்.

இதையடுத்து எதிரி தரப்பில் ஆஜராகிய சட்டத்தரணியான கே.வி தவராசா தனது வாதத்தில்,

“தெஹிவளை பொலிஸ் விடுதிக்குள் படுகொலை செய்யப்பட்டவர் புலனாய்வுப்பிரிவின் பொறுப்பதிகாரி. ஆனால் தெஹிவளை பொலிஸார் பயங்கரவாத தடைப்பிரிவு பொலிஸாரிடமோ, குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடமோ அல்லது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடமோ இந்த விசாரணைணயை ஒப்படைக்காமல் ஒரே நாளில் விசாரணையை முடித்துள்ளனர்.

எதிரி தண்டனைச் சட்டக்கோவை 296ம் பிரிவின் கீழ் தண்டிக்கபட வேண்டிய குற்றத்தை புரிந்துள்ளதாக முதல் அறிக்கையை கல்கிசை நீதிமன்றில் சாதாரண சட்டத்தின் கீழ் தாக்கல் செய்ததை அடுத்து நீதிபதி எதிரியை விளக்க மறியலுக்கு அனுப்பியுள்ளார்.

பொலிஸார் சாதாரண சட்டத்தின் சட்டத்தின் கீழேயே விசாரணைகளை நடத்தியுள்ளனர். ஆனால் சட்டமா அதிபர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கினை விசாரணை செய்த தெஹிவளை பொலிஸாரின் சம்பவத்தின் முன் பின் நடத்தைகள் பலத்த நியாயமான சந்தேகத்தை உருவாக்கியுள்ளது இந்த வழக்கு.

ஆனால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்வதாயின் பயங்கரவாதச் சட்டத்தின் வரைவிலக்கணத்திற்கு உட்பட்ட குற்றத்தை புரிந்தவராய் இருக்கவேண்டும். ஆனால் இந்த வழக்கின் எதிரி தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் என்றோ அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளுடன் எந்தத் தொடர்பும் பேணியவர் என்றோ தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் இணைந்து சதி செய்து இந்தக் கொலையை புரிந்தார் என்றோ எந்தச் சாட்சியமும் அரச தரப்பால் முன்வைக்கப்படவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நடை முறைக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை நடாத்த தடுப்புக் காவல் உத்தரவை பெறாமல் ஒரே நாளில் விசாரணையை நடாத்தி முடித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றபத்திரம் தாக்கல் செய்யப்பட்ட ஒரே வழக்கு இந்த வழக்காகத்தானிருக்கும்.

எனவே பயங்கரவாதத் தடைச் சட்டம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாக தெரியவரும் விடயமாகும். மேலும் உண்மையான கொலையாளியான தமது சகாவை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற தெஹிவளை பொலிஸார் எத்தனித்துள்ளனர் என்பது பொலிசாரின் நடவடிக்கை மூலமும் அரசசாட்சிகளின் சான்றுகளின் முரண்பாடுகள் மூலமும் வெளிப்படையாகத் தெரியவருகின்றது.

இந்த வழக்கில் அரச தரப்பு 24 சாட்சியத்தை நெறிப்படுத்திய போதிலும் கொலைச் சம்பவத்தை கண்ணால் கண்டதாக ஒரு சாட்சியும் இந்த நீதிமன்றில் சாட்சியம் அளிக்கவில்லை.

எதிரிக்கு எதிராக சூழ்நிலைச்சான்றின் அடிப்படையிலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும் அரசதரப்பினால் முன்வைக்கப்பட்ட விஞஞான ரீதியிலான மரபனு மற்றும் அறிவுசார் சான்றுகளான கைவிரல் அடையாளங்கள் பற்றிய நிபுணத்துவ சாட்சியாளர்களின் சாட்சியங்களிடையே பலத்த முரண்பாடுகள் காணப்படுவதோடு நம்பகத்தன்மையும் குறுக்கு விசாரணையில் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தெஹிவளை குற்றத் தடுப்புப் பிரிவிற்கும் தெகிவளை பொலிஸ் நிலையத்தில் இயங்கி வந்த புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கும் இடையே முறுகல் நிலை காணப்பட்டது என்பதை குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி குறுக்கு விசாரணையில் ஒத்துக் கொண்டுள்ளார். எனவே இந்த படுகொலைச் சம்பவம் பொலிஸாருக்கு இடையே ஏற்பட்ட உட்பூசலின் வெளிப்பாடேயாகும் என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேலும் இந்த வழக்கில் சாட்சியமளித்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் சுசந்த பொலிஸ் விடுதியில் கொலை நடந்த தினத்தில் தங்கியிருந்த ஒரே நபராவார். மேலும் இவரது சாட்சியம் பல முரண்பாடுகளை கொண்டுள்ளது.

முதலில் கொலையாளி கைத்துப்பாக்கியுடன் ஓடுவதை 20 அடி தூரத்தில் தான் கண்டதாக சாட்சியமளித்தவர் குறுக்கு விசாரணையில் துப்பாக்கியுடன் ஓடியவர் பொலிஸ் பொறுப்பதிகாரியை கைத்துப்பாக்கியால் சுடுவதை தான் பார்த்ததாக சாட்சியமளித்துள்ளார்.

மேலும் இந்த சாட்சி தனது ஐந்துமாத கர்ப்பிணியான மனைவியையும் மனைவியின் பெற்றோரையும் தூங்கிக் கொண்டிருக்கையில் சுட்டுக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு இந்த சாட்சிக்கு எதிராக கல்கிசை நீதிமன்றில் விசாரணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வழக்குக்கோவை சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

புலனாய்வுப்பிரிவு பொறுப்பதிகாரி சுனில் தாப்ருவும் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதே கொலையாளியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு கொலைச் சம்பவங்களும் கொலை செய்யப்பட்டவர்கள் நித்திரையில் இருக்கும் பொழுதே நடந்துள்ளது. இதனை இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த வழக்கின் எதிரியை கைது செய்த பின்னர் இந்த வழக்கில் சாட்சிமளித்த அரசின் முக்கிய சாட்சியான தெஹிவளை பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியதர்சன சேனனாயக தனது சாட்சியத்தில்,

“புலன் விசாரணையில் எதிரியிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தன்னால் மீட்கப்பட்ட கைத்துப்பாக்கியில் இலக்கம் பொறிக்கப்பட்டிருந்தாகவும் அந்த கைத்துப்பாக்கியில் எந்த விதமான கறலும் படிந்திருக்கவில்லையென சாட்சியமளித்ததுடன் இந்த நீதிமன்றில் கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கியை சான்று பொருளாக பாரப்படுத்தியுள்ளனர்.” என தெஹிவளை பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியதர்சன சேனனாயகவின் சாட்சியத்தை அரச பகுப்பாய்வாளர் தனது சாட்சியத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால் மிக முக்கியமான அரச சாட்சியான கைவிரல் அடையாள நிபுணர் குறுக்கு விசாரணையில் சாட்சியம் அளிக்கையில்,

“தெஹிவளை பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவம் நடந்த தினம் பகல் ஒரு மணியளவில் புலனாய்வுப்பிரிவு பொறுப்பதிகாரியை சுட்டுக்கொலை செய்ய கொலையாளியால் பாவிக்கப்பட்டதாக தன்னிடம் கையளித்த கைத்துப்பாக்கியை தான் பரிசோதனை செய்கையில் கைத்துப்பாக்கி கறல்பிடித்து இருந்ததாகவும் கைத்துப்பாக்கியில் எந்த விதமான இலக்கமோ கைவிரல் அடையாளமோ காணப்படவில்லையென” சாட்சியம் அளித்துள்ளார்.

பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதாக இந்த நீதிமன்றில் தடயப்பொருளாக அடையாளப்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கியான பிஸ்டல் பொலிஸாரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது சாட்சியங்கள் மூலம் தெளிவாகின்றது.

அரச பகுப்பாய்வாளரின் சர்ட்சியமும் கைவிரல் அடையாள நிபுணரினது சாட்சியமும் ஒன்றிற்கொன்று பாரிய முரண்பாட்டை கொண்டுள்ளது. மேலும் இரண்டு கைத்துப்பாக்கிகளிலும் எதிரியின் கைவிரல் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் கொலையாளி இந்த இரண்டு கைத்துப்பாக்கியையும் கொலைக்கு பாவிக்கவில்லை என சட்ட வைத்திய அதிகாரி சாட்சியம் அளித்துள்ளார்.

சட்ட வைத்திய அதிகாரி சாட்சியமளிக்கையில்,

“கொலை செய்யப்பட்ட பொறுப்பதிகாரியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் கொலையுண்டவரின் உடலில் உள்ள துப்பாக்கி துளைத்த காயங்களின் தன்மையை பார்க்கையில் சிறியரக பிஸ்டலால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் இல்லையெனவும் ரோமியோசிடி ரைபிளாள் சுடப்பட்ட காயங்கள்” எனவும் குறுக்கு விசாரணையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரச தரப்பால் முன்வைக்கப்பட்ட நிபுணத்துவ சாட்சிகளின் சாட்சியம் ஒன்றுக்கொன்று பாரிய முரண்பாட்டை காட்டுவது பொலிஸாரின் புலன் விசாரணையில் பலத்த சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றது.

மேலும் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தனது சமர்ப்பணத்தில்,

“சாட்சியங்களின் அடிப்படையில் உண்மையான கொலையாளியையும் பொலிஸார் கைது செய்யவில்லை. கொலையாளி பாவித்ததாக சட்ட வைத்திய அதிகாரியின் சாட்சியத்தில் குறிப்பிட்ட ரோமியோசிடி ரைபிளும் கைப்பற்றப்படவில்லை?

மேலும் இந்த வழக்கின் அரச தரப்பால் எதிரிக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க அரச தரப்பினால் எந்தவொரு சான்றும் முன்வைக்கப்படாமை கவனத்தில் கொண்டு இவ்வழக்கின் எதிரியை வழக்கிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். என எதிரியின் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் அரச தரப்பில் அரச சட்டத்தரணி நையனா செனவிரத்ன எதிரிதரப்பில் சட்டத்தரணிகளான தர்மஜா தர்மராஜா அனோமா பிரிய தர்சினியின் அனுசரணையில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா ஆஜரானார்.

மேலும், குறித்த வழக்கிற்கான தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like