ஆபத்தான நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் அவசர பிரிவில் அனுமதி

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று அரசியல் கைதிகளில் நிலைமை தீவிரமடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று அரசியல் கைதிகளின் உடல்நிலை மீண்டும் இரண்டாவது தடவையாக மோசமடைந்ததனையடுத்து அவசரமாக அனுராதபுரம் அரசினர் வைத்தியசாலையில் இன்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது உடல்நிலை மோசமடைந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகள் பலாத்காரமாக மீண்டும் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ள கைதிகளின் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக அனுராதபுரம் பொது வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மதியரசன் சுலக்சன் தானாக முன்வந்து மீண்டும் சிறை திரும்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

ஏனைய இருவரும் சில நாட்கள் வைத்தியசாலையினில் சிகிச்சை பெற்று திரும்ப நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பில் ஈடுபடும் 3 அரசியல் கைதிகளதும் போராட்டம் இன்றுடன் 20வது நாளை தாண்டியுள்ளது. கைதிகளாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் முன்னெடுக்கும் 11வது தடவையான உணவு தவிர்ப்பு போராட்டம் இதுவாகும்.

You might also like