வடக்கு, கிழக்கு இணைப்பு என்றால் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம்

வடக்கு, கிழக்கு இணைப்பு என்றால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் மாறாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள விடுதியொன்றில் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுடனான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவர் சிப்லி பாறுக்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கட்சிக்குள் முரண்பாடுகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியினை வெற்றிப்பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டிய பாரிய பொறுப்பு கட்சி போராளிகளுக்கு உள்ளது.

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் சிலர் தேவையற்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை எழுதிக்கொடுத்தது போன்று சிலர் கதைக்கின்றனர்.

அதனை வைத்து மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த முனைகின்றனர். முதலில் அரசியல் என்ன என்பது தொடர்பான புரிதல் இருக்க வேண்டும். சாத்தியமானவற்றை சாதித்துக் கொள்கின்ற கலைதான் அரசியலாகும்.

நாங்கள் தமிழர்களின் அபிலாசைகளுக்கு குறுக்காக நிற்பவர்கள் என்பதை காட்டப்போவதுமில்லை, சிங்களவர்கள் மத்தியில் சில விடயங்களுக்கு கூஜா தூக்கிகளாக பார்க்கப்படவேண்டிய அவசியமுமில்லை.

எங்களை பாவித்து சிங்கள சமூகம் தமிழர்களுக்கு எதனையும் செய்வதை தடுப்பதற்கு நாங்கள் உடந்தையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் ஒரு நடுநிலையான சமூகம்.

 

வடக்கு, கிழக்கு இணைப்பு என்றால் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் என்பது எமது கோரிக்கையும் கொள்கையும். அதில் இருந்து நாங்கள் மாறவில்லை.

இணைவுக்கு என்ன தேவையென்பதை யாப்பும் சட்டமும் சொல்கின்றது. அரசியல் அறிவு உள்ளவர்களுக்கு இந்த யதார்த்தம் தெளிவாக தெரியும் என தெரிவித்துள்ளார்.

You might also like