வடக்கு மற்றும் கிழக்கில் 2,000 மில்லியன் ரூபா நிதியில் 50,000 வீட்டுத்திட்டங்கள் உட்பட வாழ்வாதார திட்டங்கள்

வடக்கு மற்றும் கிழக்கில் 2,000 மில்லியன் ரூபா நிதியில் 50,000 வீட்டுத்திட்டங்கள் உட்பட வாழ்வாதார திட்டங்களை எதிர்வரும் 2018ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்த உள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இவர் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இதை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம், பொருளதார அபிவிருத்திக்குழு மற்றும் வடகிழக்கு செயற்பாட்டுக் குழுவுடன் இணைந்து, 50,000 வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.

யாழ். மாவட்டத்தில் 12,000 பேர் நண்பர்கள் உறவினர்களுடன் இருக்கின்றார்கள். நலன்புரி நிலையங்களில் 700 ற்கும் அதிகமான குடும்பங்கள் இருக்கின்றார்கள்.

அதனால், யாழ்.மாவட்டத்திற்கென 14,500 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வீட்டுத்திட்டங்களை வழங்குகின்ற போது, புள்ளி அடிப்படையில் தான் வழங்கப்படும்.

இடம்பெயர்ந்தோர்கள், மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தந்தவர்களுக்கும் உள்வாங்கப்பட்டு புள்ளிகளின் அடிப்படையில் வழங்கப்படும்.

குறிப்பாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள், முன்னாள் போராளிகள் குடும்பம், புள்ளிகளின் அடிப்படையிலும், முன்னுரிமையின் அடிப்படையிலும் வழங்கப்படும்.

இந்த வீட்டுத்திட்டத்தினை விரைவான திட்டமாக முன்னெடுப்பதற்கு, பல அரச நிறுவனங்களும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like