கேள்விக்குறியாகும் கிளிநொச்சியிலிருந்து வெளிநாடு செல்லும் பெண்களின் வாழ்க்கை

குடும்ப வறுமை மற்றும் தொழில் வாய்ப்பின்மை காரணமாக இளம் யுவதிகள் மற்றும் குடும்ப பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிச்செல்லும் நிலை அண்மைய நாட்களாக அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்தநிலை கிளிநொச்சி மாவட்டத்திலும் அதிகரித்து வருவதன் காரணமாக இது தொடர்பில் வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என கிளிநொச்சியைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் சுட்டிக்காட்டுகையில்,

யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்களில் மீள்குடியேறியுள்ள அநேகமான குடும்பங்கள் தொழில்வாய்ப்பின்றியும், வருமானங்கள் இன்றியும் வறுமை நிலையில் காணப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பின்தங்கிய கிராமங்களில் வாழும் இளம் பெண்கள் மற்றும் குடும்ப பெண்கள் வேலைவாய்ப்புக்களைத் தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கின்ற நிலைமை அதிகரித்துக் காணப்படுகின்றது.

இதனைவிட தொழில் வாய்ப்புக்களைத் தேடி ஒரு சிலர் தென்பகுதியை நோக்கி செல்கின்ற நிலைமையும் காணப்படுகின்றது.

குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிச்செல்லும் இளம் குடும்பப் பெண்கள் தங்களது வயது குறைந்த பிள்ளைகளை கணவனது அல்லது உறவினர்களது பாதுகாப்பில் விட்டுச்செல்கின்ற போதும், பிள்ளைகளுக்கு உரிய பாதுகாப்பு கல்வி போன்ற விடயங்களில் அக்கறை செலுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றது.

கிராமப்புறங்களில் இந்த நிலை தொடர்ந்து கொண்டே உள்ளது. இதேவேளை அதிக சம்பளம் தருவதாக தெரிவித்து முகவர்கள் மூலம் அனுப்பப்பட்ட பல பெண்கள் உரிய சம்பளங்கள் வழங்கப்படாது வருடக்கணக்கில் வேலைகள் வாங்கப்பட்டு திரும்பி அனுப்பப்பட்டுள்ளதுடன், பல பெண்கள் தமது குடும்பத்துடன் தொடர்புகள் அற்ற நிலையிலும் காணப்படுகின்றனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து வயதுக்கும் குறைந்த குழந்தைகளை கொண்ட தாய்மார் 30 பேர் வரையில் பிரதேச செயலாளர்களுக்குத் தெரியாது போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு முகவர்களுடாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் அதிகமானோர் போலி ஆவணங்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கும் தென்பகுதிக்கு வேலை தேடிச்சென்ற இளம் யுவதிகள் பாதிக்கப்பட்டு திரும்பியுள்ள நிலையும் காணப்படுகின்றது.

குடும்ப வறுமை காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களை சார்ந்து உள்ளவர்கள் குறிப்பாக பிள்ளைகள் பாதிக்கப்படுவதுடன், வெளிநாடு செல்லும் பெண்களும் பெரும் துயரங்களை அனுபவிப்பதுடன் அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலையும் ஏற்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

You might also like