கிளிநொச்சி, உமையாள்புரத்தில் குப்பைகளை தரம்பிரித்து அழிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை முன்னெடுப்பு

கிளிநொச்சி, உமையாள்புரம் பகுதியில் கொட்டப்படும் கழிவுகளை தரம் பிரித்து அழிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்சநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகள், உமையாள்புரம் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் கொட்டப்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,

கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு ஐந்து ஏக்கர் காணி வழங்கப்பட்டு அதில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இவ்வாறு கொட்டப்படுகின்ற கழிவுகளை உரிய முறையில் தரம் பிரித்து மீள்சுழற்சி முறையில் பயன்படுத்தக்கூடிய கழிவுப்பொருட்களை மீள்சுழற்சி முறையில் பயன்படுத்த ஏனைய கழிவுகளை அழிக்கும் வகையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு முதற்கட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது கழிவுகள் கொட்டப்படுவதனால் சூழலியல் பிரச்சினைகள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.

குறித்த பகுதியில் பாதுகாப்பான முறையில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றபோதும், கிளிநொச்சியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை மற்றும் பழச்சாறு உற்பத்தி தொழிற்சாலை போன்றவற்றின் கழிவுகளை பாதுகாப்பற்ற முறையில் அவர்கள் விரும்பியவாறு இப்பகுதிகளில் கொட்டி வருகின்றனர்.

இதேபோன்று இராணுவமுகாம்களில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகளும் இவ்வாறு பாதுகாப்பின்றி கொட்டப்படுகின்றன. எதிர்காலத்தில் இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like