முல்லைத்தீவில் காலபோக நெற்செய்கைகளுக்கு தயாராகும் விவசாயிகள்

முல்லைதீவிலுள்ள, வவுனிக்குளம் நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள 12 குளங்களின் கீழ் காலபோக நெற்செய்கைகளுக்காக விவசாயிகள் தயார்ப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைதீவு மாவட்டத்தின் மிகப்பாரிய நீர்ப்பாசனக்குளங்களில் ஒன்றான வவுனிக்குளம் நீர்ப்பாசனத்திணைக்களத்தின் கீழ் உள்ள 12 குளங்களின் கீழ் சுமார் 11,283 ஏக்கர் நிலப்பரப்பில் காலபோக செய்யையும் 6,000 ஏக்கர் வரையான சிறுபோக செய்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடந்த வருடம் முதல் நிலவிய கடும் வறட்சி காரணமாக காலபோக செய்கை பாதிக்கப்பட்ட அதே நேரம் கூடுதலான குளங்களில் சிறுபோக செய்கை மேற்கொள்ளமுடியாத நிலையும் ஏற்பட்டது.

தற்போது பருவமழை ஓரளவு பெய்ய ஆரம்பத்துள்ள நிலையில் விவசாயிகள் காலபோக செய்கைக்கு தயாராகி வருகின்றனர்.

இதன்படி வவுனிக்குளத்தின் கீழ் 6060 ஏக்கரிலும், தென்னியங்குளத்தின் கீழ் 850 ஏக்கரிலும், ஐயன்கன்குளத்தின் கீழ் 952 ஏக்கரிலும், அம்பலப்பெருமாள் குளத்தின்கீழ் 623 ஏக்கரிலும்,

கல்விளான்குளத்தின் கீழ் 400 ஏக்கரிலும், மருதன்குளத்தின் கீழ் 450 ஏக்கரிலும், பழையமுறிகண்டி குளத்தின் கீழ் 356 ஏக்கரிலும், கோட்டைகட்டிய குளத்தின் கீழ் 405 ஏக்கரிலும் கொல்லவிளாங்குளத்தின் கீழ் 262 ஏக்கரிலும், மல்லாவிக்குளத்தின் கீழ் 325 ஏக்கரிலும்,

தேறாங்கண்டல் குளத்தின் கீழ் 300 ஏக்கரிலும், பனங்காமம் குளத்தின் கீழ் 300 ஏக்கரிலும், சுமார் 11,283 ஏக்கர் நிலத்தில் நெற்செய்கைகளுக்கு விவசாயிகள் தம்மை தயார்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை ஏனைய சிறிய குளங்கள் மற்றும் மானாவாரி செய்கை நிலங்களிலும் பயிர்ச்செய்கைகளுக்கு விவசாயிகள் தயார்படுத்தி வருகின்றனர்.

You might also like