வவுனியாவில் பேருந்தில் நூதன முறையில் பணம் திருடிய பெண்கள்

வவுனியாவில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் நூதன முறையில் பணம் திருடப்பட்ட சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

வவுனியா சாளம்பைக் குளத்திலிருந்து வவுனியா நகர் நோக்கி தனியார் பேருந்தில் பயணித்த ஜெயக்குமார் லலிதா என்ற பெண்ணே 15 ஆயிரம் ரூபா பணத்தை பறிகொடுத்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

நெடுக்குளத்தில் வைத்து குறித்த தனியார் பேருந்தில் ஏறிய ஆறு பெண்கள் பணத்தை பறி கொடுத்த பெண்ணை சுற்றி நெருக்கமாக நின்றுள்ளனர்.

பின்னர் குருமன்காட்டுச் சந்தியில் குறித்த பெண்கள் குழு இறங்க முயற்சித்துள்ளனர்.

அவ்வேளை, தனது கைப்பை திறந்து இருப்பதை அவதானித்து கைப்பையை பார்த்தபோது பணம் திருட்டுபோயிருந்த நிலையில், அதிர்ச்சியில் சத்தமிட்டு அழுதுள்ளார் குறித்த பெண்.

அதுமட்டுமின்றி, தன்னைச் சுற்றி நின்ற ஆறு பெண்களுமே தனது பணத்தை திருடியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒரு பெண் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்ததுடன் குறித்த பெண்களை ஏற்றி வந்த தனியார் பேருந்தும் குருமன்காட்டுச் சந்தில் அவர்களை இறக்கிவிட்டு நழுவிச் சென்றுவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பணத்தை பறி கொடுத்த பெண்ணையும் மற்றும் சந்தேகத்திற்குரிய ஐந்து பெண்களையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த பெண்கள் குழு குருநாகல் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஆயுள்வேத சிகிச்சைக்காக வவுனியா வந்ததாகவும் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து பணத்தை பறிகொடுத்த பெண் தனது பணத்தை தந்தால் பொலிசில் முறைப்பாடு செய்யாமல் விட்டுவிடுவதாக தெரிவித்ததையடுத்து குறித்த பெண்கள் குழு பணத்தை திருப்பி கொடுத்துள்ளனர்.

இந்தநிலையில் பிரச்சினை தீர்க்கப்பட்டாலும் குறித்தபெண்கள் குழுவினரே பணத்தை கொள்ளையிட்டுள்ளனர் என தெரிவித்த பொலிஸார், பணத்தை பறி கொடுத்தவர் முறைப்பாடு செய்ய முன்வராத நிலையில் அப் பெண்களை கைது செய்ய முடியவில்லை என தெரிவித்தனர்.

You might also like