வவுனியாவில் வறட்சி நிவாரணம் வழங்குவதில் தாமதம்

வவுனியா மாவட்டத்தின் சில பிரதேச செயலக பிரிவுகளில் வறட்சி நிவாரணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியாவின் வறட்சி நிவாரணம் வழங்குவது தொடர்பில் கேட்ட போதே மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இவ்வாறு கூறியுள்ளது.

தொடர்ந்தும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கையில்,

ஒரு மாதத்திற்கு வழங்கப்பட்ட வறட்சி நிவாரணத்தை உரிய காலத்திற்குள் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளாமையால் அடுத்த மாதத்திற்கான வறட்சி நிவாரணத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டமும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் இரு கட்டங்களாக வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் முதலாம் கட்டம் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட நிவாரணத்தை இன்னும் பலர் முழுமையாக பெற்றுக் கொள்ளவில்லை.

வவுனியா வடக்கு மற்றும் வவுனியா தெற்கு, சிங்கள பிரதேச செயலக பிரிவு என்பன முழுமையாக வறட்சி நிவாரணத்தை வழங்கியுள்ளன.

இந்த நிலையில், வவுனியா பிரதேச செயலக பிரிவு மற்றும் வெண்கல செட்டிகுள பிரிவுக்கு உட்பட்ட மக்கள் இரண்டாம் கட்ட வறட்சி நிவாரணத்தை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் முழுமையாக பெற்றுக் கொள்ளாமையால் அடுத்த மாதத்திற்குரிய முதல் இரு வார நிவாரணங்களையும் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு குறிப்பிட்டுள்ளது.

You might also like