வன்னி ஏழைகளின் பசியை தீர்க்க முன்வந்துள்ள வவுனியா இளைஞர்கள்
இதயங்களை வென்ற மனிதநேயம் ”விண்மீன்கள்” எம்மால் வீணடிக்கப்படும் உணவு பற்றிய எந்த ஒரு நெருடலும் இல்லாமலே நாம் கடந்துகொண்டு செல்கின்றோம்.
இந்த நெருடல்களை உணர்வதற்காக நாம் எத்தகைய பிரயத்தனமும் படாத நிலையில் மனித நேயத்தில் சிறந்த சில இதயங்களின் எழுச்சியாக மிகச்சிறந்த திட்டம் ஒன்று ஈழ மண்ணில் அரங்கேற்றப்பட இருக்கின்றது.
இந்த திட்டம் என்ன என்பதனை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த திட்டம் என்ன? என்பதனை விளக்கும் நோக்குடன் உங்களுக்காகவே இந்த அழைப்பிதழ் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அதிகளவான உணவு வகைகள் வீணடிக்கப்படுகின்றது.
எமது சம்பிரதாய களியாட்ட நிகழ்வுகளில் வீணடிக்கப்படும் உணவினை மிக பதமாக சேமித்து உணவுத்தேவையில் வாழும் மக்களுக்கு கையளிக்கும் நோக்கில் வளரும் இளம்சமுதாய அமைப்பு ஒன்று முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றது.
இந்த அமைப்பானது தமது கரங்களுக்கு உங்களால் வீணடிக்கப்படும் உணவை கொடுத்து உதவுமாறு வேண்டி நிற்கின்றார்கள். இந்த அமைப்பின் நோக்கம் மிகவும் தூய்மையானதாக சமூக நலம்சார்ந்து காணப்படுவதால் மனிதநேயம் கொண்ட தமிழ்மக்கள் தமது கரங்களை இவர்களுடன் இணைத்துக்கொள்வார்கள் என்றே எடுத்துக்கொள்ளலாம்.
இந்த அமைப்பானது தமது ஆரம்ப கட்ட சேவையை தமிழ் பிரதேசங்களை மையப்படுத்தி ஆரம்பிப்பதுடன் காலப்போக்கில் ஈழ தேசத்தின் அனைத்து பிரதேசங்களிலும் தனது சேவையை விரிவாக்கம் செய்ய விழைகின்றது.
இந்த அமைப்பு சார் செயற்பாடுகளை ”விண்மீன்கள்” என்ற அமைப்பே முன்னெடுத்து செல்கின்றது.