கிளிநொச்சியில் வாக்குறுதி பொய்த்ததால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

கிளிநொச்சி மாவட்ட உதவி கூட்டுறவு ஆணையாளரின் வாக்குறுதி பொய்த்ததால் மீண்டும் கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

வடமாகாண பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையத்திடம் உள்ள கிளிநொச்சி பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான நலத்திட்ட நிதிகளை வழங்கக்கோரி, சங்கத்தின் பணியாளர்கள் மற்றும் அங்கத்தவர்கள் ஆகியோர், கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளரின் அலுவலகத்திற்கு முன்னால் கடந்த 10.07.2017 ஆம் திகதி அன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடத்தப்பட்டபோது குறித்த இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர், நலத்திட்ட நிதிகள் தொடர்பான பிரச்சினை ஒரு மாத காலத்தில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வாய்மொழி மூலமாகவும், எழுத்து மூலமாகவும் அறிவித்திருந்தார்.

எனினும், அவர் வழங்கிய உறுதிமொழி பல மாதங்கள் கடந்தும் நிறைவேற்றப்படாத நிலையில், கடந்த 23.09.2017 ஆம் திகதி அன்று நடைபெற்ற கிளிநொச்சி பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டத்தின் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட புதிய நிர்வாகத்தினர் அது தொடர்பில் தீவிரமாக பரிசீலனை மேற்கொண்டு 20.10.2017 ஆம் திகதி நடைபெற்ற இயக்குநர் சபைக் கூட்டத்தில் மீண்டும் பேரிணையத்திற்கும்,கூட்டுறவுத் திணைக்களத்திற்கும் எதிராக தமது கண்டனத்தை வெளியிட்டனர்.

எதிர்வரும் 31.10.2017 ஆம் திகதிக்கு முன்னர் நலத்திட்ட நிதிகள் தொடர்பாக கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் சாதகமான முடிவை வழங்காத பட்சத்தில் தொடர்ந்தும், சங்கத்தின் பணியாளர் மற்றும் அங்கத்தவர்கள் ஆகியோர் இணைந்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட, கிளிநொச்சி பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர் சபையின் 09ஆம் இலக்க தீர்மானத்தின் மூலம் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like