கிளிநொச்சியில் உவர்நீரால் ஆக்கிரமிக்கப்படும் நூற்றாண்டு பழமைவாய்ந்த விவசாய கிராமம்
கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மிகவும் பழமை வாய்ந்த குஞ்சுக்குளம் கிராமம் உவரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதனால் மக்கள் குடிபெயர்ந்து செல்வதாக அங்கு மீதமுள்ள குடும்பங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி, கரைச்சிப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள வன்னேரிக்குளம் குடியேற்றக்கிராமம் 1953ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே பூநகரியை அண்மித்த பகுதியில் காணப்படும் மேற்படி குஞ்சுக்குளம் கிராமம் நூற்றாண்டு பழமைவாய்ந்த விவசாய கிராமமாக காணப்பட்டது.
சுமார் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களும் 12 வரையான சிறுசிறு குளங்களும் காணப்பட்ட நிலையில், கடந்த காலயுத்தம் காரணமாக உவர்நீர் தடுப்பணைகள் சேதமடைந்ததன.
பூநகரி, பாலாவி போன்ற பகுதியில் கடல் பெருக்கெடுக்கும் போது, மண்டைக்கல்லாறு வழியாக உவர் நீர் உட்புகுந்து சுமார் 900 ஏக்கர் வரையான விளைநிலங்கள் முழுமையாக உவரடைந்துள்ளன.
ஏனைய நிலங்களும் உவர் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், நன்னீராக காணப்பட்ட சகல கிணறுகளும் உவராக மாறியுள்ளன.
இதனால் இப்பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் முழுமையாக இடம்பெயர்ந்து சென்றுள்ளதுடன், இப்பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த குஞ்சுக்குளம் அ.த.க பாடசாலை முன்பள்ளி என்பனவும் செயலிழந்துள்ளன.
தற்போது மூன்று வரையான குடும்பங்கள் மாத்திரமே இங்கு வாழ்ந்து வருகின்ற நிலையில், காட்டுயானைகளின் தொல்லை குடிநீர் இன்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.